Thursday, January 17, 2013

பலனை எதிர்பார்க்காமல் செயல்படும் அன்பு உள்ளங்களுடன் நாமும் இணைந்துகொள்வோம்

20.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
கானாவூர் என்னுமிடத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவும் அங்கிருந்தார். அங்கு திருமண வைபவங்களில் விருந்தோடு நல்ல திராட்சை இரசமும் தாராளமாகப் பரிமாறப்படுவது வழக்கமாக இருந்தது. எதிர்பாராதவிதமாக அவ்விருந்தில் இரசம் தீடிரென திருமண விழாவில் தீர்ந்து போய்விட்டது. திருமண வீட்டார் குழம்பியிருக்க இNசுவின் தாய் அன்னைமரியா அவர்களின் அவமானத்தை போக்க தம் மகன் இயேசுவிடம் பரிந்துபேசினார். புதுமை நிகழ்த்தக்கூடிய நேரம் இன்னும் வரவில்லையென்று இயேசு தம் தாயிடம் கூறுகிறார். இருப்பினும் தாய் சொல்லைத் தட்டாத மைந்தன் இயேசு தண்ணீரை சுவைமிக்க திராட்சை ரசமாக மாற்றிக் கொடுத்தார். இதுவே இயேசுசெய்த முதல் புதுமை. இயேசுவின் புதுமைகள் நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள். விசுவாசத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகள். இயேசுவின் புதுமைகள், உறுதியை வளர்க்கப் பவனி வந்த அவனியின் ஆச்சரியங்கள்.

“உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை ஒரு குருவானவரிடம் கேட்டபோது. “மனிதர்களே” என்று அவர் சொன்ன பதில் எம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது: மனிதர்கள்; தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் சுமைசுமந்து போகிறார்கள். அவர்கள்; நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை. எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள். மிகவும் ஆழமான வார்த்தைகள். இயேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்து விடலாம். சுமைகளைச் சுமந்து, அல்லது, சுமைகளைப் பிறர் மீது சுமத்தி வாழ்ந்து வரும் நாம், நமது சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். அவர் நமது சுமைகளை நீக்குவார். சுகம் தருவார். புதுமைகள் நம்வாழ்விலும் நிகழும்.

நம்மில் சிலர் புதுமைகளை, அதுவும் நற்செய்தியில் வரும் புதுமைகளை நம்புவதுமில்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றும் ஆலயங்களிலும் மருத்துவ மனைகளிலும் பலரின்; உருக்கமான நம்பிக்கை மிக்க வேண்டுதல் காரணமாகவும் கடவுள் புதுமைகளை நிகழ்த்தி வருவது கண்கூடாக இருப்பதாக பல அறிவியலார் தெரிவிக்கின்றனர். முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.

தன்னலம் கருதாது திருமணவீட்டாரின் அவமானம் போக்க செயற்பட்ட அன்னை மரியாவை எண்ணிப்பார்க்கும்போது ஒரு கதை நினைவில் நிழலாடுகிறது: பக்தர் ஒவ்வொருநாளும் கடவுளையே நினைத்து, தியானித்து வாழ்ந்துவந்தார். அவர் முன் கடவுள் தோன்றி அவருக்கு ஏதாவது ஒரு வரம் தருவதகக் கூறினார். “இறைவா, உம்மைத் தியானிக்கும் ஒரு வரம் எனக்குப் போதும், வேறு வரம் எதுவும் வேண்டாம்” என்று பக்தர் கூறினார். ஏதாவது ஒரு வரம் கேள் என்று அவரைக் கடவுள் கட்டாயப்படுத்தினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், பக்தர் சொன்னார். கடவுளே, தரையில் விழும் என் நிழலைத் தொடும் அனைவரும் நலம் பெற வேண்டும். அனால், ஒரு நிபந்தனை. எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலைத் தொடும் மக்களே குணமாக வேண்டும். எனக்கு முன் விழும் நிழலுக்கு அந்த சக்தி இருக்கக் கூடாது." என்று வரம் கேட்கிறார்;.

தனது சக்தியால் நன்மை நடக்க வேண்டும், ஆனால், அது தனக்குத் தெரியாமல் நடக்க வேண்டும் என்பதில் அந்த பக்தர் மிகத் தெளிவாக இருந்தார் என்று கதையை கவனமாக ஆராய்தால் நமக்கு புலப்படும். தன்னலத்தை அறவே துறந்த பக்தனின் ஒட்டுமொத்த உருவாக, அவர்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக மரியா வாழ்ந்தார் என்பதற்கு கானாவூர் திருமண நிகழ்வு மற்றொரு எடுத்துக்காட்டு. அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி தன் மகனிடம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தாலும், அந்த சக்தி மற்றவருக்கு மட்டுமே பயன்பட வேண்டுமேயொழிய, தன் நலனுக்காக அல்ல என்பதில் மரியா தெளிவாக, தீர்க்கமாக இருந்தார். மரியாவின் இந்த வேண்டுகோளுக்கிணங்க, இயேசு ஆற்றிய புதுமையை தனிச்சிறப்புப் பெறுகின்றது.

வீடு தீப்பற்றி எரியும்போது, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்குப் பதில், தண்ணீர் ஊற்றுபவர்களைத் தடை செய்யவேண்டும் என்று கூறும் நாட்டில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த நோக்கமும் இல்லாமல், வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் அன்னை மரியா செயற்பட்டார். இவ்வாறு செயல்படும் அன்பு உள்ளங்கள் உலகத்தில் இன்றும் நடமாடுகிறார்கள். அவர்களுடன் நாமும் இணைந்துகொள்வோம்

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff