Monday, January 21, 2013

வரலாற்றை நாமும் மாற்ற மனம்மாறுவோம்


25.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
கத்தோலிக்க திருச்சபை பவுலின் மனமாற்றத்தை இன்று கொண்டாடுகின்றது. பவுல் பென்யமின் குலத்தைச் சேர்ந்த யூதக் குடும்பத்தில் கி.பி-10ம் ஆண்டில் பிறந்தவர். இவரது யூதப் பெயர் சவுல். இவர் தர்சு நகரத்தை சேந்தவர். இவர் யூதச் சட்டம் நெறிமுறைகளையும் கற்றவர். அன்றைய உலகப் பொது மொழியாம் கிரேக்கம் கற்றவர். கமாலியேல் என்பவரிடம் கல்வி பயின்றார். இவர் கி.பி. 60இல் கைது செய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது. இவர் யூத கோட்பாடுகளையும் நன்கறிந்து பரிசேயர் சமயப் பிரிவின் உறுப்பினராகவும் இருந்தவர். இப்பிரிவினர் தொடக்க காலத்தில் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி வந்தனர் அவர்களுடன் சேர்ந்து இவரும் அவர்களை துன்புறுத்தி வந்தார்.

சவுலாகிய இவர் சீறி எழுந்து திருத்தொண்டு செய்யும் முடியப்ரை கல்லெறிந்து கொல்வதற்காகவும், இயேசுவினுடைய சீடர்களை கொன்று விடுவதாகவும் கிறிஸ்துவர்களை துன்புறுத்துவதாகவும் தமஸ்கு நகர் சென்றுகொண்டிருந்தார் அந்த வழியில் இவரை இயேசு தடுத்து ஆட்கொள்கின்றார். தீடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்? என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் ஆண்டவரே நீர் யார்? எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக நீ துன்புறுத்தும் இயேசு, நானே! உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும் இவ்வாறு ஆண்டவரின் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தாம் தேர்ந்து கொள்ளப்பட்டார் என உணர்ந்து.  ஆண்டவரின்  கருவியாக செயல்ப்பட்டார். இயேசுவை யார் சிலுவையில் அறைந்து கொன்றார்களோ, அவர்களிடையே பிறந்த சவுல் பவுலாக மாற்றி இயேசுதான் உண்மை மெசியா  என்பதை அவர் நாவினாலே அறிக்கையிடும் விதமாக அமைந்தது அவரது இந்த மனமாற்றம். பவுலில் வாழ்க்கையின் இந்த நாள் வரலாற்றை மாற்றி அமைத்த நாள்.

தன்னை அருளால் ஆண்டவன் இயேசு நிரப்பியபோது மனமாற்றம் வந்தது நிஜத்தில் கால்பதித்த நெஞ்சத்தின் உயிர்த்தவிப்பு அது. கிறிஸ்தவர்களை எதிர்த்துச் சென்றார் சவுல். எதிர்ப்பட்ட கிறிஸ்துவை  சந்தித்து பவுலாகி இனி வாழ்பவன் நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று கூறக்கூடிய நிலையை அடைகிறார். இதுதான் மனமாற்றம். மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்குத் திரும்புதல். பாறைக்குள் பதுங்கியிருந்த புதுமையைப் பக்குவமாய் தட்டி எடுக்கும் அதிசயம். முள்ளில் விழுந்த சேலையைக் கிழிபடாமல் எடுக்கும் கலை. எல்லாம் இழந்து இறைவனை மட்டும் பற்றிக்கொள்ளும் இரகசியம்.

நீ துன்புறுத்தும் நாசரேத்தூர் இயேசு நானே என்ற சொற்கள் பவுலுக்கு மட்டுமன்று நமக்கும் பாடமாய் அமைகின்றன. கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டு அவரை நேசிப்போமாயின் எல்லோரையும் நாம் நேசிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே சாதி, குலம், ஏழ்மை முதலிய அடிப்படையில் வேறுபாடுகள் காட்டுவோமாயின் கிறிஸ்துவையே எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்கிறோமா. மனமாற்றம் ஒருவரது வாழ்வின் உயர் குறிக்கோளை சரியான பாதையில் மாற்றி அமைக்கிறது. அதனால் பழக்கவழக்கத்திலும் பண்பாட்டிலும், நடத்தையிலும முழுமையான மாற்றம் உண்டாகிறது.

மனமாற்றம் அறிவு சார்ந்ததல்ல. கொள்கை சார்ந்ததல்ல. கோட்பாடுகளின் மாற்றம் அல்ல. உடலில், உடையில், உணவில் உள்ள மாற்றம் அல்ல. இயேசுவோடு உண்டான தனிப்பட்ட நெருக்கமான உறவில் விளைந்த ஒன்று. இந்த உறவை மறுக்க முடியாது. அதன் கவர்ச்சி எந்த ஈர்ப்பையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. அப்படித்தான் பவுல் மாட்டிக்கொண்டார். இத்தகைய மனமாற்றம் எவருக்கும் எப்பொழுதும் எந்த நேரத்திலும் ஏற்படலாம். அதற்கென தகுதி, நேரம் காலம் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை அவசியமில்லை. அந்தஸ்து, அறிவு முக்கியமில்லை.

பவுலின் மனமாற்றம், அவர் புதிய ஞானத்தை வழங்கி திருச்சட்டம், இறைவாக்கினர்கள் பற்றிய உண்மையை புதிய வழியில் விளக்கவும் தனது விண்ணக போதகரைப் பின்பற்றி அனைவருடனும் உரையாடல் நடத்தவும் உதவியது. இக்கால மனிதராகிய எமக்கு கிறிஸ்துவும் அவரது மீட்புச் செய்தியும் இன்னும் தேவைப்படுகின்றது. இக்கால மனிதராகிய நாம் எமது கதிக்குத் நாமே தலைவர் என்று உணர்வதால் எமது தீர்மானங்களிலும் செயல்களிலும் கடவுளை புறம்பாக்கிவிடுகின்றோம். புனித பவுலின் மனமாற்றம் அவர் உயிர்த்த கிறிஸ்துவை சந்தித்ததில் முதிர்ச்சியடைந்தது, அதுவே அவரது வாழ்வை அதிரடியாக மாற்றியது. பவுல் நற்செய்தியை நம்பியதால் மனம்மாறினார். பவுலது மற்றும் நமது மனமாற்றம், இறந்து உயிர்த்த இயேசுவை நம்புவதிலும், சுடர்விடும் அவரின் இறையருளுக்கு நம்மைத் திறந்து வைப்பதிலும் அடங்கியுள்ளது. கிறிஸ்தவர்களை துன்புறுத்திய தனக்காகவும் இயேசு இறந்தார், இப்பொழுது அவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்ற உண்மையைத் தனது மீட்பு சார்ந்துள்ளது என்பதை பவுல் புரிந்து கொண்டார். எனவே ஒருவரின் மனமாற்றம் என்பது, இயேசு சிலுவையில் எனக்காக இறந்தார் என்றும், உயிர்த்தெழுந்த அவர் என்னில் என்னோடு வாழ்கிறார் என்றும் நம்புவதாகும். இயேசுவின் உறவில் மகிழ்ந்து வாழவும், பிறரை வாழ்விக்கவும் நம்மையும் எதிர்பாராத வேளையில் இயேசு அழைக்கலாம். எனவே வரலாற்றை நாமும் மாற்ற மனம்மாறுவோம்

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff