Friday, June 19, 2020

செய்தியின் கூறுகள் -அளவுகோல்கள் - News Elements


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, 
யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




ஓர் ஊடகவியலாளர், தமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி தரமான ஒரு செய்தியை எழுதவேண்டும். ஒரு செய்தி நிருபர் தனது செய்தியினைச் சமூகவியல் வெளிப்பாடுகள், பிரசாரம் மற்றும் மனித நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி எழுதலாம். செய்திகள் தயாரிக்கப்படும் உண்மைப் விடயங்கள் மிகவும் மென்மையானவை. அவைகள் வாசகர்கள், இரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து உடனடிபிரதிபலிப்பைப் பெறுகின்றன. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள செய்தி எழுத்து நடை மற்றும் வடிவத்தை அமைப்பதற்கு செய்தி உறுதிப்படுத்து கின்றது.

செய்திக்கு மதிப்பையும் பெறுமானத்தையும் தகமையையும் வரவேற்பையும் வழங்கும் விதத்தில் எழுதும்போது -தயாரிக்கும்போது- வடிவமைக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டிய செய்திக் கூறுகள் பற்றி நோக்கவோம்:- 

1. Accuracy – துல்லியம் 
2. Balance and Fairness  – சமநிலையும் நியாயமும் 
3. Objectivity– குறித்தவிடயம்
4. Clarity– தெளிவு
5. Conciseness -Brevity– சுருக்கம் 
6. Credibility: நம்பகத்தன்மை- Factual – உண்மைதன்மை 
7. Meaningful- கருத்தாளம் - அர்த்தம் நிறைந்தது
8. Interesting– கவனத்தை கவருதல் ஃ சுவாரிசம்
9. Comprehensiveness  – அனைத்துவிடயங்களையும் உள்ளடக்கியமை
10. Cohesiveness / Order– இணக்கத்தன்மை / தொடர்தன்மை / ஒழுங்குமுறை 
11. Current – நடப்புநிலை 


1. துல்லியம் : உண்மையற்ற செய்தி உயிரற்ற செய்தியாகும். அரைகுறை ஆதாரங்களோடு, சொந்த எண்ணங்கள், கருத்துக்களோடு மெய்பொருள் காணாமல் அறிக்கையிடுவது உண்மைத் தன்மைக்கு ஆப்பு வைப்பதைப் போன்றது. உண்மைகளைச் சரிபார்க்க நேரம் போதுமானதாக இல்லை என்ற காரணத்தைக்காட்டி ஊடகவியலாளர்கள் தப்பித்துக்கொள்ளகூடாது. அசட்டுத் தனத்தாலோ, அறியாமையாலோ வேண்டுமென்றோ, சொந்தக்காரணங்களுக் காகவோ பிழையான தகவல்களை வழங்கக்கூடாது. இங்கு தமிழில் உள்ள ஒரு பழமொழியை நோக்குவது இதற்கு துணைபுரியும்: 'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு." 

இங்கு 'நன்றாக இருக்கிறது. நன்றாக வளரும், ஏசுவார்கள் எரிப்பார்கள் அஞ்சவேண்டாம். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள்." என்று 1959.02.19அன்று கொழும்புத்துறை யோகர் சுவாமிகள் ஈழநாடு முதல் இதழைப் பார்வையிட்டபின்பு அருளிய ஆசீர், பத்திரிகைத்துறையில் நோக்கப்பட வேண்டியது. (யாழ் நகரின் நீண்டகாலம் ஒரே பத்திரிகையாக வலம்வந்த இந்த பத்திரிகைக் காரியலயம் பலதடவை எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) 

தகவல்கள் உண்மையானதா என ஐயப்பாட்டினை எழுப்பும்போது பிழையாக வெளியிடுவதை தவிர்த்து அந்த செய்தியை பிரசுரிக்கமால் விடுவதே சாலச்சிறந்தது. சந்தேகம் எழும்போது நீக்கி விடுக- Where/when in doubt, Leave it out என்ற ஊடகவியலாளரக்குரிய பொன்மொழியை இங்கு ஞாபகப்ப டுத்துவது மிகவும் பொருத்தமானது. ஆதாரமற்ற செய்திகள் ஆபத்தான செய்திகளாக முடியும் என்பதை எப்போதும் ஊடகங்கள் நினைவில் நிறுத்தவேண்டும். 

நாம் துல்லியம் என குறிப்பிடும் போது தகவலின் ஒவ்வொரு சிறு துண்டும்- every crumb of its details மிகவும் சரியக உறுதிப்படுத்தப்பட்ட துல்லியத்துடன் இருக்கவேண்டும்:-

  • செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள், பதவிகள் கட்டயம் சரியான துல்லியத்துடன்  இருக்க வேண்டும்.
  • செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • செய்தியில் மனிதர்களின் வயதுகள் கொடுக்கப்பட வேண்டுமாயின் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • நிகழ்வு (சம்பவம், பெரியார்களின் உரைகள், விபத்துக்கள்) செய்தியாக வெளியிடப் படவேண்டுமாயின் திகதிகள், நாள்கள், நேரங்கள், விபத்துக்களில் பாதிக்கப்பட்வர்கள் விபரங்கள் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • மொழிசார்ந்த - உச்சரிப்பு, வார்த்தைகள், இலக்கணத்தின் கட்டமைப் புக்கள்  சரியான துல்லியத்துடன் இருக்கவேண்டும்.
  • மக்களின் கருத்துகள்ஃவெளியிடப்பட்ட அறிக்கைகள் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும். செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ள மேற்கோள்கள்,சூழமைவும் சரியானதுல்லியத்துடன் இருக்க வேண்டும். இது இன்னுமொரு அர்த்தத்தை–பொருளைக் குறிக்கும் வகையில் தவறாகக் மொழி பெயர்க்கப்படக்கூடாது.
  • விஞ்ஞானம் சார்ந்த தகவலாக இருந்தால் விஞ்ஞான ரீதியாக சரியாக எழுதப்பட்டு விளங்கப்படுத்தப்பட்டுள்ளதா? எனபதை சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும். 
  • விளையாட்டுடன் சார்ந்த தகவலாக இருந்தால் நிலை நாட்டப்பட்ட சாதனைகள், எடுக்கப்பட்ட ஓட்டங்கள், பெறப்பட்ட கோல்கள் போன்ற வை சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்.
  • நீதிமன்றத்துடன் தொடர்புடைய தகவலாக இருந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை திரிபு படுத்தாமல் சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்.
ஊடகங்களில் தோன்றியதை பெறுநர்கள் ஒருபோதும் நம்பவில்லை என்று சொல்வதற்கு ஒருபோதும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதற்கு ஊடகவியலாளர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். செய்தியில் வழங்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வாசகர்கள் கேள்விகள் எதுமின்றி ஏற்றுக்கொள்ள தக்கவகையில் செய்தி எழுதப்படவேண்டும். துல்லி யம் என்பது சரியானது. அந்த சரி சாதாரணமான பொதுவான தோற்றத்தில் மட்டுமல்ல, மாறாக  விவரங்களிலும் கூட சரியாக அமையவேண்டும். ஒரு செய்தித்தாளுக்கு அல்லது ஊடகத்திற்கு  துல்லியமானது என்பது ஒரு பெண்ணுக்கு என்ன நல்லொழுக்கம் போன்றதை ஒத்ததாகும்.


2. நடுநிலையும் நியாசமும் (பாரபட்சமற்ற நிலை);: நாணயத்திற்கு இருபக்கங்கள் இருப்பதுபோல செய்திக்கும் இருபக்கங்கள் உண்டு என்பதை நாம் கற்றறிந்து எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு விடயத்தினை விளக்கும் போது அதன் இருபக்கங்களையும் அப்படியே படம் பிடித்து காட்டுவது சாலச்சிறந்தது. எந்த செய்தியும் பக்கம் சாராமல் வெளியிடப்படும்போது மதிப்புடையதாகிறது. பக்கம் சார்ந்து, பகுதிக் கருத்து க்களை பிரதிபலித்து, ஒரு தரப்பின் விருப்பு வெறுப்புக்களுக்கு மட்டும் இடம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகள் சமநிலை பேணுவதில்லை. 

உ-ம்:பல்கலைக்கழகத்தில் போராட்டம் ஏற்ப்பட்டிருப்பின் அதுதொடர்பாக துணைவேந்தரினதும் அவரது குழுவினரதும் அறிக்கைகளை வெளியிடும் போது மாணவர்களின் குரல்களையும் கருத்துக்களையும் வெளியிடுவது சமநிலையை பேணுதலுக்கு எடுத்துக்காட்டாகும். தீர்ப்பு வழங்கப்பபடும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர் என குறிப்பிடுவது சாலப் பொருத்தம். இலங்கையில் நடந்து முடிந்த 56,58,77,82,83 இனக்கலவரங்களுக்கு ஊடகங்களின் சமநிலை பேணப்படாத- பொறுப்பற்ற செயற்பாடுமே ஒரு காரணம் என கூறலாம்.

நியாயத்தன்மை என கருதும் போது ஊடகவியலாளர்கள் தமது சொந்தக் கருத்துக்களை- ஆலாசனைகளை- நோக்கங்களை சேர்க்கக் கூடாது. வெளியி டப்படும் செய்திகளை ஆயிரம் ஆயிரம் மக்கள் படிக்கப் போகிறார்களை. அதிகமான வார்த்தைப் (சிலேடைசொல்;) பிரையோகங்கள் வெளியிடுவ தானால் அவர்களின் சிந்தனாசக்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது. நடுநிலை வார்த்தைகளைப் பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது.

ஒவ்வொரு விடயத்திலும் செய்திகளை சமநிலையாக எழுதுவது என்பது எளிதான காரியமல்ல என்றாலும் செய்திகள் சமநிலையாக எழுதப்பட வேண்டும், எந்தவொரு நிகழ்வினையும் மிகச்சிறந்த முறையில் சமநிலை யுடன் வழங்க ஓர் ஊடகவியலாளர் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும். ஊடகவியலாளர் குறிப்பிட்ட அனைத்து உண்மைகளையும் சரியாகவும் நியாய மாகவும், துல்லியமாகவும், புறநிலைத்தன்மையாகவும்-குறிக்கோளுக்கமை வாக எழுத வேண்டும். அவர் தனது செய்தி அறிக்கை சரியான உண்மை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து உண்மைகளையும் ஒன்றாக இணைத்து எழுதவேண்டும். அவர் நிகழ்வு நடைபெற்றமாதிரியே அந்த நிகழ்வின் நியாயத்தை படம்பிடித்துப் பெறுநருக்கு காட்டவேண்டும். செய்தி உள்ளடக்கம் மற்றும் அர்த்தத்தில் சமநிலையில் இருப்பது அவசியம். ஒரு நிருபர் முழு சூழ்நிலையையும் ஒரு சீரான பார்வையை அளிக்க உண்மைக ளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்கு ஏற்பாடு செய்து எழுதவேண்டும்.



3. குறிக்கோள்: செய்தி என்பது ஒரு நிகழ்வு நிகழ்ந்ததைப் பற்றிய ஓர் உண்மை அறிக்கை ஆகும். செய்தியானது குறித்த ஒரு விடையத்தை நோக்கமாக-மையமாகக் கொண்டிருக்க வேண்டும். செய்தியைவெளியிடும் ஊடகம் ஒருபக்கம் சாய்ந்து செயற்படக்கூடாது. செய்திகளில் ஊடகங்களின் தனிப்பட்ட சார்புகள், விருப்பு வெறுப்பக்கள் பிரதிபலிக்கக்கூடாது. ஒரு செய்திக்கு இருபக் கங்கள் இருக்குமாயின் இரண்டு பக்கங்களுக்கும் முழுமையான தழுவுதல்கள்- (coverage)- கொடுக்கப்பட வேண்டும். இன்னொரு வார்த்தையில் கூறுவதையின் செய்தியானது சமநிலை வாய்ந்ததாக இருக்கவேண்டும். 

செய்தியில் உண்மைகள் நிகழ்ந்தபடியே பக்கச்சார்பற்ற முறையில் தெரிவிக் கப்பட வேண்டும். செய்திகளில் உள்ள குறிக்கோள் - புறநிலைத் தன்மை நவீன பத்திரிகையியலில் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும். இதன் கருத்து எந்தவொரு தனிப்பட்ட சார்பு அல்லது எந்தவொரு வெளிப்புற செல்வா க்குமின்றி தெரிவிக்கப்பகிறது என்பதாகும். செய்தி தவிர்க்க முடியாதது. ஒரு நிழலும் இல்லாமல் செய்திகளை வழங்கவேண்டும். பளபளப்பாக வண்ணங் களாக்கப்பட் வடிவமாக நிகழ்வுகளை-செய்திகளை ஒரு ஊடகவியலாளர் பார்க் கக்கூடாது. முழுக்க முழுக்க பக்கச்சார்பற்ற முறையில்; செய்திகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு விடயத்திலும் நேர்மையான அவதானிப்பு அவசியம். குறிக்கோள்- புறநிலைத் தன்மை; செய்தி எழுதும் போது அவசியம் ஏனென்றால் பெறுநர் தங்கள் கருத்துக்களை செய்திகளின் அடிப்படையில் உருவாக்குவதனால் தூய்மையான செய்திகளால் மட்டுமே பெறுநர்களுக்கு நம்பிக்கையைத் கொடுக்க முடியும். எனவே செய்தியில் எல்லா நடையிலும் புறநிலைத்தன்மை; -குறிக்கோள் இருக்க வேண்டியது அவசியம்.

4. தெளிவு: சமூகத்தில் பலதரப்பட்டவர்கள் செய்திகளை பெறுகின்ற பெறுநர் களாக உள்ளனர். எனவே சாதாரண சராசரி வாசகர்களைக் கவனத் தில் கொண்டு எப்போதும் செய்திகள் வெளியிடப்படவேண்டும். செய்திகள் எப்போதும் இலகு மொழியில் அழகுநடையில் தெளிவு சாரலில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பலபொருள் கொடுக்கும் சொற்களை-ambiguous சிக்கல் கொடுக்கும் மொழிநடை யை தவிர்க்க வேண்டும். சரியான தெளிவு டன் இலக்கணக் குறிகளை சரியாக, சரியான இடத்தில் பாவிக்க வேண்டும். (பொலிஸ், வாகனத்திற்கு கல்வீச்சு) (09.06.2017 வலப்புரி பத்திரிகை 12 பக்கம் குழப்பத்துடன் வந்த தலையங்கம் ஒன்றை நோக்குவோம். நீதிபதி கர்ணனுக்கு விதித்த தண்டனையை ஒரு போதும் இரத்துச் செய்ய முடியாது) செய்தி வெளியிடுவதன் பிரதான நோக்கம் வாசகரை சுற்றி என்ன நடக்கிறது என்ற விம்பதத்திற்குள் அவர்களை வைத்திருப்பதாகும். எனவே செய்திகளை வாசகர்களின் அறியவேண்டும் என்ற ஆவலை the reader’s inquisitiveness திருப்திப டுத்துவதாக அமையவேண்டும். வாசார்களுக்கு தெளிவு இல்லை என்ற தகவல்கள் தவிர்க்கப்படவேண்டும்.    It is said that a reporter, when is in doubt, he should leave it out. 
தெளிவாகவும் குழப்பமின்றியும் திட்டவட்டமாகவும் செய்திகள் வெளியி டப்படவேண்டும். ஊடகங்கள் என்ன சொல்கின்றன என பெறுநர்கள் யோசிக்குமளவிற்கு செய்திகளில் வாசகர்கள் குழப்பமடையக்கூடாது. சொல் சிக்கனமும் பொருள் செறிவும் மிக்க சிறிய வாசனங்களே எப்போதும் சிறந்தது. பொருத்தமான சொற்களை பொருள் விளங்கி பாவிக்கவேண்டும். எல்லோ ருக்கும் தெரிந்த சொற்களை எப்போதும் பாவிக்கவேண்டும். புதிய சொற்க ளாயின் விளக்கங்கள் கொடுக்கப்படவேண்டும். தெளிவற்ற செய்தி கள் தேவை யற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.

உ-ம் நாவாப் என்பவரின் உயிர் ஊசலாடுகிறது. இரவு 11மணிக்கு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது 12.45 மணிக்கு பின்னிரவு தாண்டமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது கல்கத்தா சண்டே பத்திரிகையின் சென்னை செய்தியாளர், நாவாப் இறந்துவிட்டாக செய்தி யை வெளியிட்டார். ஆனால் அவர் இறக்கவில்லை. பத்திரிகை வெளிவந்து 5 மணித்தியாலங்கள் கழித்தே இறந்தார். அடுத்த நாள் மற்றய ஊடகங்கள் நாவாப் அவர்கள் இறந்து விட்டார் என தெரிவிக்க, குறிப்பிடப்பட்ட அந்த ஊடகம் நாவாப் அவர்கள் உண்மையாகவே இறந்து விட்டார் Nawab is really read  என செய்திவெளியிட்டது.

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட செய்தி வடிவத்தை செய்திகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். செய்தி ஒத்திசைவாக, சுருக்கமாக, தெளிவாக மற்றும் எளிமையானதாக கட்டாயம் இருக்க வேண்டும். செய்தியானது அங்கும் இங்கும் பாய்ந்துகொண்டு சீரற்றதாக இருக்கக்கூடாது. It must not be jumpy and uneven=சீரற்ற. சீரற்றறுகண்டபாட்டிற்கு பரவியுள்ள, ஒழுங்கற்ற மற்றும் அர்த்தத் தில் தெளிவற்ற ஒரு செய்தி, செய்திகளின் சிறப்பியல்பு கொண்டிருப்பதில் லை. அர்த்தம்; முற்றிலும் தெளிவாக இருக்கும் வகையில் செய்தி மிகவும் தெளிவாக ஒருங்கிணைத்து எளிமை யாக எழுதப்பட்ட வேண்டும்.


5. நம்பகத்தன்மை: செய்திகள் எப்போதும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும். வெளியிடப்படுவதற்கு முன்னர் உண்மைகள், தகவல்கள், புள்ளிவிபரங்கள் சரியானதா என பலதடவைகள் பரிசோதிக்கப்பட வேண்டும். செய்திகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற அவசரச் செயற்பாடு தவறுகள் அச்செய்திக்குள் நுழைவதற்கு வாய்பளித்த விடும். எனவே செய்திகளை, செய்தி வெளியிட்டு ஆசிரியருக்கு அனுப்புவதற்கு முன்பே நகலை திரும்பப்பார்த்து திருத்திக்கொள்வது சாலச்சிறந்ததாகும். செய்தியா னது இன்னும் திருத்தப்பட வேண்டும் என்றால் திருப்பி எழுதுவதே பொருத்த மான தாகும். செய்திகள் ஆதாரபூர்வமாக சேகரிக்கப்படவும் வெளியிடப் படவும் வேண்டும். 

எந்த செய்தியும் அது தரப்படும் நிலையத்தின் நம்பகத்தன்மையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. பெரும்பாலான வாசகர்கள் எந்தெந்த செய்தி நிறுவனங்கள் நம்பகத்தன்மை வாய்தவை என தெரிந்து வைத்திருக்கிறார் கள். 

உ-ம்: பி.பி.சியை நம்பகத்தின் நடுநிலையமாக தெரிந்து வைத்திருக்கி றார்கள். லங்காபுவத் என்ற செய்தி நிறுவனத்தை லங்கா புழுகு என்றும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை இலங்கை ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனம் என்றும் பெறுநர்கள், நேயர்கள் தமக்குள் கதைப்பதை கேட்கும்போது இதனை நம்பகத்தன்மை அற்ற நிகழ்விற்காக இங்கு குறிப்பிடலாம். 

a உண்மைதன்மை / நம்பகத்தன்மை: செய்தியானது உண்மையாக நடந்த நிகழ்வின் தகவல் அல்லது அறிக்கை, சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படவேண்டும். நாம் வாழும் இந்த ஊடக சகாப்பத்தில் செய்தியினை படிக்கும் ஊடகத் தெரிவுகள் பரவலாகவும் பரந்ததாகவும் உலகளவியதுமாக இருக்கின்றன. ஓர் ஊடகத்தில் வெளியான செய்தியானது உடனடியாகவே வேறு ஓர் ஊடகத்தில் பரிசீலித்து சரிபார்க்கக் கூடியநிலை காணப்படுகிறது. வறட்டுதையிரியத்தை எடுத்துகொண்டு செய்திகளை சோடித்தும், கற்பனை களை இடைச்செருகியும்- fabricated or concocted வெளியிடுவது ஊடகத்தின் நற் பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் குந்தகம் விழைவிக்கும் செயலாக அமைந்துவிடும். எனவே சரியான தகவல்களையும் உண்மை களையும் வெளியிடுவது ஊடகங்களின் தலையாயக் கடமைகளாகும். 

மேற்கூறப்பட்ட துல்லியம், நடுநிலை, தெளிவு ஆகியன ஒன்று சேரும்போது அந்தகவல் மீது நம்பகத்தன்மை ஒன்று கட்டயெழுப்பப்படுகிறது. செய்தி ஒன்றில் நம்பகத்தன்மை உருவாக்கப்படுகிற விதம் பற்றி எளிய சமன்பாடு ஒன்றினை யுனெஸ்கோ தொடர்பாடல் நிபுணர் போல் டி மெசுனியர்( Paul De Mesuniyar - Measeneer) எடுத்துக் காட்டுகிறார்: 

A         +               B        +           C                =              C
Accuracy               Balance           Clarity                         Credibility

6. கருத்தாளம் / அர்த்தம் நிறைந்தது: செய்திகள் அர்த்தம் முள்ளவையா கவும் கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கவேண்டும். சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டதாக அமைக்கப்படவேண்டும். நாம் கற்றுக் கொள்ளும் செய்தி பெறுமானங்களை தாங்கியவையாக இருக்க வேண்டும்.  

7. கவனத்தை கவருதல் / சுவாரிசம்: செய்திகள் வெளியிடப்படும்போது வாசகர்கள் அந்த செய்தியை படிக்கும்போது சலிப்படையாது ஆர்வத்துடன் அறிய துடிக்கவேண்டும். அழகுமொழியில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட -கட்டமைக்கப்பட்ட செய்தி வாசகர்களில் ஆர்வத்ததை தூண்டி சலிப்புத்தன் மையை நீக்கிவடும் எனலாம். 

8. சுருக்கம்:  செய்திகள் சுருக்கமாகவும் சுவையானதாகவும் அமைகின்ற போது அதன் மதிப்பு அதிகரிக்கின்றது. அதனை அறிவோர் மகிழ்ச்சி அடைவர். செய்திகள் தேவையற்று நீண்டு செல்லக்கூடாது. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மீண்டும் மீண்டும் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். குற்ற செயல்களான செய்திகளாயின் அவற்ரை செய்தியாக மட்டும் பிரசுரிக்க வேண்டும். அதை விடுத்து ஏன் இந்த செயல்கள் நிகழ்கின்றன. இன்று பரவலாக இச்செயல்கள் எங்கும் நிகழ்கின்றன. என்று எழுத முற்படக்கூடாது. அவ்வாறு முற்படுவது இந்த விடயம் குற்றசெயல்கள் என்ற அல்லது விபரணக் கட்டுரையை ஊடகத்தில் எழுதுவதங்கு பொருத்தமான தலைப் பாகும். ஆனால் செய்தி அறிக்கையிடலுக்குப் செய்திக்குப் பொருத்தமானதல்ல. செய்திகளை சுற்றிவளைத்து வெளியிடும்போது வாசகர்களும் ஏன் செய்தியாளரும் குழப்பமடைந்து விடுகின்றனர். ஆங்கிலத்தில் ஒரு காலத்தில் ஒரு வசனத்தில் பாவிக்கப்பட்ட வார்த்தைகள் காலத்திற்கு காலம் குறைந்து வருகிறன. 17நூ- 45 சொற்கள், 19நூ-30 சொற்கள், இன்று 20 சொற்களுக்கு குறைவாகப் பயன்படுத்தப்படுகிறன.

சுருக்கம் என்னும்போது குறிகியதாக எழுதுவதல்ல. மாறாக குறுகிய சொற்களில், குறுகிய வசனங்களில், சிறிய பந்திகளில் எழுதுவதாகும். சிறிய சிறிய பந்திகளாக ஒரு கருத்தை அச்செய்திக்குள் எழுதும்போது அச்செய்தி சுவைநிறைந்ததாக அமைந்துவிடும். இன்றைய வாசகர்கள் அவசரமாக உள்ளார்கள். நீண்ட செய்திகளைப் படிக்க விரும்பமாட்டார்கள். சிறிய பந்தி களில் செய்தியை வடிவமைக்கும்போது பார்வைக்கு இலகுவாகவும் கண்க ளுக்கு இதமாகவும் அவர்களுக்கு அமைந்து விடுகிறது. உ-ம் உலகப்புகழ் பெற்ற பத்திரிகையாளர் புலிட்சர் சுருக்கமாக எப்படி எழுதுவது…? சொல்லவேண்டிய எல்லாத்தையும் எழுது. அதை அவுஸ்ரேலி யாவுக்கு சொந்த செலவில் தந்தி அனுப்புவதாக எண்ணிகொள்ளும் சுருக்கம் தானாக வந்தவிடும் என கூறுகின்றதை இங்கு நினைவுபடுத்துவது நன்று.

9. அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியமை/பூரணத்தன்மை: இதனைக் நோக்கும்போது எல்லா விடயங்கள், அம்சங்கள் உள்ளடக்கப் படவேண்டும் என்பதாகும். ஒரு செய்தியை படிக்கின்ற வாசகர் மனதில் நியாயமாக எழக்கூடய எல்லாக் கோள்விகளுக்கும் அச்செய்தி அழகுற விடைகொடுக் குமாக இருந்தால் அனைத்து விடயங் களையும் உள்ளடக் கியமை என்பது பூரணமாகிறது. பொதுவாக செய்தியானது '5-எ" வினாக்க ளுக்கும் ஒர் 'ஏ" வினாவிற்கும்: என்ன?, ஏன்? எங்கே?, எவர்?, எப்பொழுது?, எப்படி?, - (05 Ws+ 01 H: What?, Why?, Where?, Who?,  When?  How?) விடைகளை கொடுத்துவிட்டால் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியமைக்குள் வந்துவிடும் எனலாம். ஒரு செய்தியைப் படிக்கும்போது வாசகர் மனதில் நியாயமாக எழக்கூடிய எந்தக்கேள்வியும் இந் கேள்விகளுக்கள் அடங்கி விடுகின்றன.  

உ-ம் ஒரு சம்பவம் நடந்து விட்டால்:  என்ன நடந்தது?, ஏன் நடந்தது?, எங்கே நடந்தது?, எவர் நடத்தினார்?, எப்பொழுது நடந்தது?, எப்படி நடந்தது?, What happened?, Why happened? Where happened?, Who did it?,  When happened?  How did it happen?)  என்ற வினாக்களுக்கு பதில் கொடுத்துவிட்டால் அது ஒரு பூரண செய்தியாகும். இதற்கு இன்று சில சந்தர்ப்பங்களில் 6ஆவது “எ” –“W= for Whom” க்கு விடைகொடுக்கவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. அதாவது எவருக்காக நடத்தப்பட்டது? என்ற வினாவிற்கான விடையும் விளங்கப் படுத்துவது கட்டயமாகிறது. இன்று நம்மை சுற்றி நடத்தப்படும் வாள்வெட் டுக்கள் இதற்கு உதாரணமாக லாம். எவருக்காக இந்த குற்றச்செயல்கள் நடத்தப்படுகிறது. உண்மையில் இவர்களை பயன்படுத்துபவர்கள் எவர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டியது கட்டயமாகிறது.


10. இணக்கத்தன்மை / தொடர்தன்மை ஃ ஒழுங்குமுறை - வரிசை: செய்திகள் எழுதப்படும்போது ஒரு தொடர் ஒழுங்கு காணப்படவேண்டும். அதாவது பாகங்களின் பொருத்தம்-Symmetryஒத்ததன்மை காணப்படவேண்டும். சரியாக திட்டமிடப்பட்டதாக, ஒழுங்கு படுத்தப்பட்டதாக, பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். செய்தியின் கடைசிப்பந்தியில் செய்தி யின் முடிவு அமையவேண்டும். சரியாக பொருந்தப்படாத பாகங்களை கொண்ட செய்தி கள் அதன் அழகை கெடுத்துவிடுகின்றன. இதனால் வாசகர் கள் சரியான ஒழுங்கில் படிப்பதற்கு குந்தகம் விளைவித்துவிடுகிறது. Symmetry mars the  beauty  and the listener does not go on with the bulletin smoothly and comfortably. செய்தியானது அங்கும் இங்கும் பாய்ந்துகொண்டு சீரற்றதாக இருக்கக்கூடாது. It must not be jumpy and uneven.

Attribution– பண்புக்கூறுகள் ஃ மூலக்கூறுகள்: இந்த மூலக்கூறு இன்று மிகவும் முக்கியமானது. செய்தியின் தகவல் மூலம் எங்கிருந்து வருகிறது என்பத னை குறிக்கின்றது. இச்செய்தியானது எங்கிருந்து வருகிறது? ஒரு நேர்கா ணலில் இருந்து வருகிறதா? ஒரு நிறுவனம் ஊடகத்திற்காக வெளியிடப்பட்ட அறிக்கை யிலிருந்து வருகிறதா? ஓர் உரையிலிருந்து வருகிறதா? ஒரு நீதிமன்ற தீர்ப்பி லிருந்து வருகிறாதா? அல்லது வேறு ஓர் ஊடகத்தில் வெளி யிடப்பட்ட செய்தியி லிருந்து எடுக்கப்பட்டதா? என்பதை குறிப்பதாகும். இதனைக் கொண்டு வாசகர்கள் செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வர். 

11. நடப்புநிலை : ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பெறுநருக்காக உண்மைகள் அல்லது கருத்துகள் மீது ஆர்வத்தை மற்றும்  முக்கியத்துவத்தை வைத்திருக்கும் சரியான நேரத்து அறிக்கையே செய்தி எனலாம். நடப்புக் காலதோடு இசைதல்-ஒத்ததாக செய்தி அமையவில்லை யாயின் அல்லர் அதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படாவிட்டால் செய்தி களின் வரைவிலக் கணம் முழுமையடையாது போய்விடும். காலதோடுஇசைதல் என்பது செய்திகளின் சாராம்சம். விடயங்கள் எப்போதுமே மாறிக்கொண்டே இருக்கும் என்பது நாம் அறிந்ததே. இதனால் செய்தியின் காலம் முக்கியமானது. காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் செய்தியில் குழப்பம் ஏற்படலாம்.  மேலும் செய்திப்பெறுநர்கள் தங்களுக்கு அக்கறை யுள்ள அல்லது ஆர்வமுள்ள விடயங்களில் மிக சமீபத்திய தகவல்களை விரும்புகிறார்கள். தற்போதைய சூழ்நிலைகளில் செய்தி விரைவாக மாற்றத்திற்கு உள்ளாகக்கூடும். காலையில் நிகழும் நிகழ்வுகள் முற்றிலும் மாலையில் காலாவதியாகலாம் அல்லது குழப்பத்தை உருவாக்கலாம். பெரும்பாலான செய்திகள் இன்றைய| என்று பெயரிடப்பட்டுள்ளன அல்லது மிகமிக அண்மையில், நேற்றிரவு என குறிப்பிட்டு எழுதப்படுகின்றன. செய்தி ஊடகங்கள் நேரம் குறித்து தனித்து வத்தை பேணுகின்றன. செய்தி சமீபத்தியது மட்டுமல்ல, உண்மையி லேயே இந்த விடயத்தில் அதுகடைசி வார்த்தையாகும் என்று ஊடகங்கள் பெறுநருக்கு கூறுகிறார்கள்.

ஓர் ஊடகவியலாளனது வேலை தெரிவிப்பதேதவிர, சம்மதிக்க வைப்ப தில்லை." ஆனால் ஊடகங்கள் இன்று இந்த அடிப்படையிலிருந்த எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என எண்ணும்போது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.


உசாத்துணை நின்றவை:-
  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 
  3. http://studylecturenotes.com/characteristics-of-news-are-accuracy-balance-concise-clear-current/, accessed on 10.06.2020

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff