கொரோணா தாண்டவமாடும் தருணத்தில் தாதிமாரின் தன்னம் மறந்த சேவையைத் தரணி போற்ற வேண்டும்
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்- தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை ஆசிரியர்- யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் மே12ம் திகதி சர்வதேச தாதியர்-செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு தாதியர் அர்ப்பணிப்போடு ஆற்றும் பணிகளையும் தியாகச்சேவையின் சிறப்புக்களையும் சிறப்பாக நினைவு கூருவதற்குஎன இத்தினம் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது.
சர்வதேச செவிலியர் அமைப்பு ((International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவு கூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இத்தினத்தை செவிலியர் தினமாக அறிவிக்கவேண்டுமென விடுத்த அழைப்பை அப்போதைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் நிராகரித்துள்ளார். இருப்பினும் 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினமான மே 12 ஆம் நாள் சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள தாதிகள் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரம் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆஸ்பத்திரிக்கு அத்தியவசியமாகத் தேவைப்படும் அர்ப்பணிப்பாளர்கள் தாதிமார்கள் தான் என்றால் அகில அரங்கில் அது அங்கீகரிக்கபடும் உண்மையாகும்.
மனித வர்க்கத்திற்கு இன்று அதுவும் கொரோணா தாண்டவமாடும் தருணத்தில் தாதிமாரின் தன்னம் மறந்த சேவையை தாராள குணத்துடன் தரணி போற்றவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. மதிப்பிட்டுவிட முடியா அவர்களது சேவைக்கு உள்ளத்தின் ஆளத்திலிருந்து நன்றிகள் பல காணிக்கையாக்க வேண்டும்.
பொறுப்புள்ள முறையில் பண்பாகப்பேசி பக்குவமா செயற்பட்டு மனித எச்சங்களைக்கூட அச்சமின்றி மிச்சங்கள் இல்லாது அகற்றி உணர்வோடு உரசித் தாதியர்கள் தரும் சேவைகள் கட்டயம் மெச்சிக்கப்பட வேண்டியவை. 'தாதியர்தினம்" என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை மறந்து விட முடியாது.
ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு'இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே" தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார். தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் தாதிகளுக்கான பயிற்சிப்பள்ளியையும் முதலில் ஆரம்பித்தார். விளக்கேந்திய சீமாட்டி, கை விளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார். பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள்.
அவருக்கு 1837ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், எதிர்ப்புக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து தன் வாழ்நாளையே தாதிச் சேவையில் அர்ப்பணித்தார்.
தாதியர் பணியில் 25வகையான நிலைகள் உள்ளன என அறிய முடிகிறது. ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு விதமான பட்டப்படிப்பு தகைமைகள் அவசியமாகிறது. இதில் கலாநிதிப்பட்டமே அதிஉயர் நிலையாகும். இதனை கற்பதற்கு முதலில் இளநிலை பட்டம் அதனை தொடர்ந்து முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் 'வைத்திய தாதியர்கள் " “Doctor Nurse” என்ற நிலையை அடைகின்றனர்.
சேவைக்கே அடையாளமாக வெள்ளைச் சீருடை அணிந்து தாதியர்கள் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் இருகண்களாகக் கொண்டு செய்யும் தியாகப்பணி பாரெங்கும் பாராட்டப்பட வேண்டியதே. உலகின் சுகாதார பணியாளர்களில் 50வீதமானோர் தாதியர்கள் மற்றும் மருத்துவ பணிப்பெண்கள் என கூறப்படுகின்றது. தற்போது உலக அளவில் தாதியர்கள் எண்ணிக்கை குறைவடைந்து
வந்துகொண்டிருக்கின்றது என்பதும் கவலைதருகின்ற ஒரு விடயமாகும்.
அன்னைக்கு-பாரியாருக்குஅடுத்தபடியாக பாரினில் அன்பாகவும் அரவணைப்பாகவும் அருவருப் பின்;றியும் நம்மைப் பார்த்துக் கொள்ளும் ஒரு சீவன் என்றால் அது தாதியராகத்தானே இருக்க முடியும். சுகாதாரச் சேவையை முன்னெடுத்துச் செல்வதிலும், நோயைத்தடுப்பிலும் சமுதாய பராமரிப்பிலும் தாதியர்கள் முக்கிய பங்கு புரிகின்றார்கள்.
இலங்கையில் தாதியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளின் கீழ் இலங்கையில் அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் சர்வதேச தாதியர் தின விழா ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. மனம் சலிக்காது சேவை வழங்கலுக்கு சான்றாகும் தாதியர் இன்னொரு தாய் என்றால் மிகையாகாது. இவ்வாறு உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளைக் கண்ணியப்படுத்தி கௌரவிப்பது அவர்களுக்கு வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.
மருத்துவர்களின் வலது கரமாகவும், நோயாளர்களுக்கு அன்பானவராகவும்; அணுகப்படும் தாதியர் தாதிமை தொழில் உயர்வாகவே கருதப்படுகின்றனர். தற்போது, பல்வேறு பணிவகிபாகங்களின் சுமைகளுக்கும் சவால்களுக்கும் இடையே சோர்ந்த சரிந்த போகாது தாதியர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். அர்பணிப்பின் அர்த்தத்தை அனைவருக்கும் விளக்கும் சின்னமாக தாதியர் கருதப்படுகின்றனர்.
'தாதியர் என்பது மாறுதலுக்கான சக்தி- சுகாதாரத்திற்கான முக்கிய வளம்" என்பதே உணர்வோம் 'செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது" எனும் குறளிற்கிணங்க தாதியர்கள் உணர்வோடு ஒன்றி ஆற்றும் சேவை அளப்பெரியது. தாதியர் சேவையை மேம்படுத்துவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என அகில இலங்கை தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் ஒரு முறை விடுத்த கோரிக்கையை என்றும் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாம்.
No comments:
Post a Comment