Monday, May 18, 2020

பத்தி எழுத்துதாளர் பணி ஒரு வழக்கறிஞரைப் போன்ற பணி

சொற்குறைப்பும் பொருள் செறிவும் நிறைந்ததாக சுருக்கமாகவும் சுவையாகவும் பத்தி எழுத்தை எழுதுவோம்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



பரவலாக  இன்று பேசப்படும் பத்தி எழுத்துக்கள் என்றால் என்ன என நோக்குவோம்:

பத்தி எழுத்துக்கள் என்றால் என்ன என்பதற்கு விடைதேட முயன்ற வேளை யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத்துறையில் தனக்கென தனி இடத்தை, அறிவைக் கொண்ட ஒரு ஆளுமையுடன் உரையாட நேர்ந்தது. அவர் தமிழ் இதழியல் துறைக்கு இன்றுவரை 12 புத்தகங்களை தந்த ஓர் எழுத்துலக அரிமார் ஆளுமை. குருவானவர், பத்திரிகை ஆசிரியர். விரிவுரையாளர், பேச்சாளர். ஊடகக் கற்கை; நிறுவனம் ஒன்றின் உருவக்குனர் என விரியும் இவரது ஆளுமை இலங்கையில் வேறுயாருக்கும் இருக்கப் போவதில்லை என்றால் அது சாதாரண சொல்லல்ல. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் அவர் அருள் திரு ரூபன் மரியாம் பிள்ளை அடிகளார் ஆவார்.

அவருடைய உரையாடலில் நாம் கற்றுக்கொண்டது: இன்று பத்தி எழுத்துக்கள் என்று கூறப்படுவதை முதலில் பாத்தி எழுத்துக்கள் என்று பலர் கூறினார்கள் என்றும் பின்னர் இன்று பத்தி எழுத்துக்கள் என்று கூறுகின்றார்கள் என்றும் தெரியவந்தது. ஆனால் இன்று பத்தி எழுத்துக்கள் என கூறப்படுவதற்கு பகுதி எழுத்துக்கள் என கூறுவது சாலப்பொருத்தம்  என அவரது கருத்தில் இருந்து வெளிவருவதை நாம் உணர முடிந்தது. 

பத்தி எழுத்தாளர் என்ற சொல் ஒப்பீட்டளவில் சமீபத்திய தோற்றம் கொண்டது. ஆனால் உண்மையில் 1920இல் இருந்து இச்சொல் வந்திருக் கின்றது, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகைச்சுவையான இதழ்களின் வளர்ச்சியில் இது பெரும் பங்கு வகித்திருக்கின்றது. 1920 களில் அரசியல், பொருளாதாரம், புத்தகங்கள், திரைப்படங்கள், சமுதாயம், மருத்துவம், வீட்டுத் தயாரிப்பு, விளையாட்டு மற்றும் சமகால வாழ்க்கை மற்றும் யோசனைகள் உட்பட பல துறைகளில் பத்தி எழுத்துக்கள் பெருகி வந்து கொண்டிருகின்றன. மேலும் இணையத்தின் வளர்ச்சி தனிப்பட்ட பத்தி எழுத்தாளர்களின் அணுகலை உலகளாவிய பெறுநருக்கு- வாசகர்களுக்கு பெரிதும் விரிவுபடுத்தியது.

'அந்த எழுத்துக்கள் அனைத்தும் தொடர்ச்சியான அடிப்படையில் வெளிவரும் இதழியலில் நிரந்தர தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட எழுத்துக்கள் " என்று Prof Shafique Jhallandhari  'நிரந்தர தலைப்பின் கீழ் ஒரு குறிப்பிட்ட வகை எழுத்து"  Prof Maskeen Ali Hijaz என்று பேரசிரியர்கள் குறிப்பிடுவதை இங்கு குறிப்பிடுவது நல்லது.

பத்தியை ஆங்கிலத்தில் Column (நெடுவரிசை) என்றும், பத்தி எழுதுபவர்களை மேலைநாடுகளில் பத்தி எழுதுபவர்களை Columnist என்று ஆழைக்கின்றோம். பத்தி எழுத்து என்பது பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் தமிழுக்குக் கிடைத்த புதியதொரு வடிவமாகும். கட்டுரைக்குரிய மரபுகளை மீறி ஆக்கப்படும் இந்த வடிவம் ஒரு வகையில் படைப்பாக்கமாகவே அமைகின்றது. பத்தி எழுத்துக்கள் பிற செய்தி அமைப்புகளிலிருந்து பரிந்துரைக்கப்படலாம், தனித்தனியாகவோ அல்லது சிறுசிறு பாத்திகளினைப் போலவோ அமைக்கப் படலாம். பொதுவாக அவ்வாறு எப்போதும் இல்லை என்றாலும், ஒரு நிறுவப்பட்ட கருப்பொருளைப் பின்பற்றி பத்தி எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. மற்றும் இந்த பத்தி எழுத்துக்கள் பெரும்பாலும் வன்-கடினமான செய்தியைவிட 'மென்மையான" செய்திகளைப் போலவே அமைக்கப்படலாம், ஆனால், எப்போதும் அவ்வாறு அமையும் என்றும் இல்லை.
பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், இன்று ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய விடயங்களைப் பேசுகிற, குரல் கொடுக்கிற எழுத்தாக உலகெங்கும் மாறியுள்ளது. பத்திகள் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டயமும் இல்லை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பத்திகள் உண்டு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது.இன்றைக்கு இணையத்தில் Blog, Facebook போன்றவற்றில் எழுதப்படுகிற எழுத்துகளைக்கூடப் பத்தி எழுத்துகளாகவே அடையாளம் காட்டுகிறார்கள்.

பத்தி எழுத்துக்கள் ஒரு செய்தி கட்டுரை அல்ல, ஆனால் அது செய்தி. பொதுவாக பத்தி எழுத்துக்கள் ஏன், எப்படி என்ற வினாக்களுக்குப் பதிலளிக்கிறது. இது பெரும்பாலும் தனிப்பட்டது, முதல் மற்றும் இரண்டாவது நபரை (நானும் நீங்களும்) பயன்படுத்தி எழுதப்படுகின்றது எனலாம். ஒரு பத்தி எழுத்து பெரும்பாலும் ஒரு கருத்தை கூறுகிறது. இது ஒரு திறந்த கடிதம் எழுதுவது போன்றது என்று கூறப்படுகிறது. ஒரு பத்தி எழுத்திற்கு என ஒரு தகுந்த தலைப்பு உண்டு: (யாசகரின் பதில்கள்) இது தலைப்பு என்று அழைக்கப்படுகிறது, அடுத்ததாக எழுதுபவரின் பெயரைக் கொண்ட ஒரு வரி உள்ளது. இவை எழுதுபவரையும் எழுதுபவரின் பத்தியையும் வாசகருக்கு அடையாளம் காட்டுகின்றன.

ஒரு பத்தி எழுத்திற்கும், இதழியலின் ஏனைய வடிவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு யாதெனில் ஒருபத்தி எழுத்து பத்திரிகையில் (வெளியீட்டில்) வெளிவரும் ஒரு தொடர்ச்சியான சித்திரிப்பு முறையாகும். அதுமட்டு மல்லாது ஒரு பத்தி ஒரே எழுத்தாளரால் அல்லது ஊடகவியலாளரால் சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதப்படும்; ஒரு விடயம் தொடர்பானதாகும். இதனுள் எழுத்தாளரது சொத்தப் பார்வையும் அடங்கியிருக்கும். பத்திகள் கட்டுரையைப் போலவே ஒரு ஆரம்பம் அதாவது முன்னுரை மற்றும் உடல்பகுதி, முடிவுரை என்று மூன்று விதமாக பகுக்கக்கூடியதாக இருக்கும்.

An article on a particular subject or by a particular writer that appears regularly in a newspaper or magazine. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்து அல்லது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரால் செய்தித்தாள் அல்லது பத்திரிகையில் தொடர்ந்து எழுதப்படும் எழுத்து பத்தி எழுத்து என்ப்படும். அந்த வகையில் யோசிக்கும்போது பத்தி எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துக்குள் இல்லாமல் free form  போலத் தோன்றினாலும் ஒரு எளிமையான முறை பத்திகளுக்கு உண்டு. அதை ''4S"  என்று சொல்வார்கள். Short, Simple, Sound, Sing
  1. Short – அளவு – பொதுவாக சொற்குறைப்பும் பொருள் செறிவும் நிறைந்ததாக சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதப்படும்;
  2. Simple – எளிமை – வாசகனின் அறிவுப்பரப்பு குறித்த தெளிவுடன் இருத்தல், அவனுக்குப் புரிகிற மொழியில், புரியக்கூடிய விடயங்களை மட்டுமே பேசுவது. 
  3. Sound – தெளிவு – எழுதுபவரின் எழுத்து அவருடை தரப்பைத் தெளிவாகப் பேசவேண்டும். எழுதுபவரின் கருத்துகளை தெளிவாக எடுத்ரைக்கப்படவேண்டும். 
  4. Sing – தனித்தன்மை – பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவது, தனித்தன்மையான வாக்கிய அமைப்புகளை உருவாக்குவது. எழுதுபவரின் எழுத்து மற்றவர்களிடமிருந்து தனியாகத் தெரியும்படி அமைத்துக் கொள்ளல்  

ஒரு பத்தி எழுதுவதற்கு முன்பு, பின்வரும் நான்கு விடயங்களைப் பற்றி கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்:

  1. எழுதுவதன் நோக்கம், 
  2. அதன்பெறுநர்(வாசகர்) 
  3. உள்ளடக்கம் 
  4. ஒழுங்குக்கட்டமைப்பு

பத்தி எழுதும் போது செய்ய வேண்டியவைகள்:-

  1. பெறுநருக்கு-வாசகர்களுக்கு காலத்தோடு இசைந்த பயனுள்ள தகவல்களை வழங்குதல்
  2. ஓர் ஒழுங்குக்கட்டமைப்பை விருத்தி செய்தலும் அதனை தொடர்ந்து பேணலும்.
  3. ஓர் ஒழுங்கு நிகழ்ச்சி அமைப்பில் எழுதுதல்
  4. சொற்குறைவும் பொருள் செறிவும் கொண்ட எளிய -சிறிய வாக்கியங்களை, பந்திகளை அமைத்தல் 
  5. தனிப்பட்ட பத்திகளில் உள்@ர் பெயர்களையும் இடங்களையும் பயன்படுத்துதல்
  6. பயன்படுத்தும் உசாத்துணைகள் மற்றும் மேற்கோள்கள் மூலம் மற்றவர்கள் எழுதுபவரைப்  பற்றி கதைக்க வழிசமைத்தல்
  7. செய்திக்கும் பத்தி எழுத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிதல்

பத்தி எழுதும் போது செய்யகூடாதவை:-

  1. தொழினுட்ப ரீதியில் கடினமான குழப்பமான சொற்களை தவிர்த்தல்
  2. அறிமுகமில்லாத சொற்தொடர்கள் மற்றும் புரியாத சொற்களை தவிர்த்தல் 
  3. ஒருமுறை ஒரு தலைப்பைப்பற்றி நிலையாகக் கதைத்தல் 
  4. விடயங்களை மீண்டும் மீண்டும் கூறுதல்
  5. அளவுக்கு அதிகமான விபரங்களைத் தவிர்த்தல்
  6. வாசிப்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தமை
  7. மூன்றம் நபராக எழுதுபவர் தன்னைப் பயன்படுத்தாமை.

நடைமுறையில் உள்ள பத்தி  எழுத்தாளர்களை இன்று பின்வருமாறு வகைப்படுத்தலாம் 

  1. Advice columnist  – என்பது கேள்வி பதில்களாக சமகால வாழ்வில் உண்டாகும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள். இது ஒரு பிரசித்தமான எழுத்துமுறை. ஒருவருக்கு இருக்கக் கூடிய பிரச்சினையை; கடிதமாக எழுதினால் தீர்வு சொல்வார்கள்.
  2. Critic  – என்பவர்கள் விமர்சகர்கள், கலை, இலக்கியம், கட்டுமானம், உணவு போன்ற துறைகளில் விமர்சிப்பவர்கள்.
  3. Editorial opinion columnist  – சமகால அரசியல் சமூக நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனம் அடங்கிய பத்திரிக்கைத் தலையங்கம் எழுதுபவர்கள்.
  4. Gossip columnist  – பிரபலங்களைப் பற்றி, அவர்களது படைப்புகள் குறித்த விமர்சனங்களை பெயர் குறிப்பிடாமல் எழுதுபவர்கள் (கிசுகிசு). 
  5. Humour columnist – சமகால நிகழ்வுகளை, அரசியலை, நபர்களை பகடியாக விமர்சிப்பது. இதில் நகைச்சுவை ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும்.
  6. Food Columnist  – உணவகங்கள், உணவுமுறைகள் குறித்த எழுத்து.
  7. இதுபோக இன்று பங்குவர்த்தகம் மற்றும் அதன் போக்கு குறித்த பத்திகளும் வெளிவருகின்றன.

மேலும் பத்தி எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்…

  1. பத்தி எழுதுபவர்கள் ஒரு நிகழ்வில் ஏதேனும் தரப்பைத் தேர்ந்தெடுத்து எழுதுவது அவசியம், மதில்மேல் பூனை நிலை உதவாது. 
  2. தம்முடைய தரப்பில் கவனம் செலுத்தவேண்டும். 
  3. அதேசமயம் எதிர்தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும். 
  4. ஒப்பீடுகளோடு கருத்தை விளக்குவது எளிதில் புரியவைக்கும். 
  5. தனி மனிதரையோ, அரசியல் சமூக நிகழ்வுகளையோ அல்லது சூழலையோ விமர்சிப்பதில் தவறில்லை, தைரியமாக விமர்சிக்க வேண்டும். 
  6. எழுத்தில் எப்போதேனும் சுய அனுபவம் சேர்வதும், உள்ளூர் சமாசாரங்களும் பத்தியை சுவாரசியமாக்கும். 
  7. வாதத்திற்கு வலுச்சேர்க்கும் உண்மை நிகழ்வுகளைக் குறிப்பிடுதல்.
  8. களத்தில் இறங்கிச் செய்திகளை சேகரித்து அவற்றைத் தெரியப்படுத்துவது நல்ல உத்தி. 
  9. கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருங்கள், மேம்போக்கான கருத்துகளை யாரும் ஒருபோதும் விரும்புவதில்லை. 
  10. ஒரு சிக்கலில் வெறுமனே அதைக்குறை சொல்வதை விட்டுவிட்டு அதற்குத் தீர்வு சொல்ல முயலுதல். அதுதான் தேவை, குறை சொல்வது என்பது யாராலும் முடியக்கூடியதே. 
செய்திப் பத்திரிகையொன்றில் படைப்பாக்க வழியிலான வஞ்சப் புகழ்ச்சியின் பயன்பாடு இயலுமை கொண்டதாக இந்த பத்தி எழுத்துக்கள் காணப்படும். செய்திப்பத்திரிகை ஊடகவியலாளரின் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவும் இந்தபத்தி எழுத்துக்கள் காணப்படும். செய்திப் பத்திரிக்கையின் உள்ளடக்கத்தின் பிரதான பகுதிகளில் இந்த பத்தி எழுத்துக்கள் காணப்படாவிட்டாலும் பத்திரிகைக்கு இந்த பத்தி எழுத்துக்கள் வலுச்சேர்க்கும் வல்லமை கொண்டமைந்தவை  என்று சொன்னால் அது ஒரு சாதாரண சொல்லல்ல. ஒரு செய்திப் பத்திரிகையின் முதற்பக்கத்தில் உள்ளடக்கப் படக்கூடிய தகவல் கட்டமைப்புக்களுள் இந்த பத்தி எழுத்துக்களும் அடங்கும். பத்தி எழுத்தாளரின் மொழித் தனித்துவம் போன்று படைப்புக்கும்; அதிக இடம் கிடைக்கிறது. உதாரணமாக பத்தியை கடிதமாக, அறிக்கையாக அல்லது கவிதையாகயும் ஆக்கமுடியும். 

பத்தி எழுத்துக்கள் எழுதும் கலை

பத்தி எழுத்துக்கள் எழுதுதல் என்பது கடினமான ஒரு முயர்ற்சி. ஏனெனில் அதற்கு நல்ல சிந்தனை ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரு நல்ல பத்தி எழுத்து எழுத ஒரு கருத்தை சுமாராக வெளிப்படுத்தும் திறனை விட அதிகமான திறன் தேவைப்படுகிறது. எழுதுபவரின் கருத்துக்கள் உணர்வை தூண்டி உருவாக்க வேண்டும், நுண்ணறிவை வழங்க வேண்டும், மேலும் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும். பத்தி எழுதுபவர்; இதையெல்லாம் ஒரு மகிழ்வுட்டும் வழியில் செய்ய வேண்டும். பத்தி எழுத்துதாளர்க் கிட்டத்தட்ட ஒரு வழக்கறிஞரைப் போலவே இருக்க வேண்டும். பத்தி எழுதுபவரின் வாதங்கள் மூலம், வாசகர்களை பத்தி எழுதுபவரின் பார்வைக் கோணம் சரியானது என்று நம்ப வைக்க வேண்டும். ஒரு சக்திவாய்ந்த வாதத்தை வடிவமைப்பது அவரது கடமை மற்றும் அறிவின் அழத்தை விரிவுபடுத்தி ஒரு குறிப்பிட்ட எழுவினையை - சிக்கலை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யும் திறனை கொண்டிருக்க வேண்டும். நேரான செய்தி மற்றும் சித்திரிப்பு எழுத்தைப் போல அல்லததால் பத்தி எழுத்துக்கள் வாசகர்களை அர்ப்பணித்திருப்பதால். பயனுள்ள பத்தியை எழுத சில மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். விடயத்தை ஒரு சுவாரஸ்யமான முறையில் எவ்வாறு முன்வைப்பது மற்றும் எழுத்தை நேரடியான முறையில் எவ்வாறு முன்வைப்பது என்பதில் முனைப்பாக இருக்க வேண்டும். வாசகர்களை ஈர்க்கும் ஒரு வெற்றிகரமான செய்தித்தாளாக உங்கள் பத்தி எழுத்து அமைய வைக்க வேண்டும்.

'தி நியூயார்க் டைம்ஸ்"  பத்திரிகையில் பணியாற்றிய புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் வில்லியம் சஃபைர் புதுவிதமான எழுத்து முறையை அறிமுகப்படுத்தினார். செய்தியின் புதுமையையும் கருத்து கூறுவதையும் இணைத்து அவர் உருவாக்கிய அந்த எழுத்து முறையை 'கருத்துடன் கூடிய செய்தி" என அவர் அழைத்தார். 'உங்கள் பத்தியில் அதுவரை அறியப்படாத ஒரு உண்மையை நீங்கள் பொதித்துத் தருவீர்களெனில், நீங்கள் அதை மக்கள் விரும்பிப் படிக்குமாறு செய்வதோடு அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றும்படியும் செய்ய முடியும்"  என்று வில்லியம் சஃபைர் குறிப்பிட்டார். 


ஒரு நல்ல பத்தியை எழுதவும் அடையாளம் காணவும் இக்குறிப்புகள் உதவும். பத்திகளில் தன்னிலை வாக்கியங்கள் அடிக்கடி எழுதப்படக்கூடாது, அப்படி எழுதினால் அது சுய அனுபவக் கட்டுரைகள் அதாவது Anecdote என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள், அந்த வகைமைக்குள் வந்துவிடும். எனவே சுய அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுவோமானால் அதைப் பத்திகள் என்று சொல்லக்கூடாது. ஒரு நிகழ்வில் ஏதேனும் ஒரு சார்புநிலையில் இருந்து எழுதப்பட வேண்டும். எனவே துதி பாடுதலும் வெறுப்பும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனக்கொண்டு பத்திக்குள் புதுமை புனைவோமா.

உசாத்துணை நின்றவை:-
  1. https://www.zeepedia.com/read.php?column_writing_definition_various_definitions_why_most_powerful?_feature_and_column_writing&b=74&c=19  accessed on 15.05.2020 at 9:10
  2. https://www.britannica.com/topic/columnist accessed on 15.05.2020 at 9:12
  3. https://extension2.missouri.edu/cm360 accessed on 15.05.2020 at 9:15
  4. https://chriscarosa.com/2018/07/todays-columnists-find-their-roots-in-revolutionary-war-era-pamphleteers/ accessed on 15.05.2020 at 9:14
  5. https://www.wikihow.com/Write-a-Newspaper-Column accessed on 15.05.2020 at 9:17
  6. https://newsigaram.blogspot.com/2019/05/paththi-eluththu-endraal-enna-what-is-column-writing.html Accessed on 15.05.2020 9:20pm
  7. https://www.hindutamil.in/news/others/96822--1.html accessed on 15.05.2020 at 9:21
  8. தமிழ் இலக்கிய நயம், தரம் 10-11, நான்காம் பதிப்பு-2017, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை. (www.edupub.gov.lk நாடலாம்)


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff