Sunday, May 24, 2020

கண்பார்வையையும் கவனத்தையும் சுண்டியிழுக்கும் கருத்துப் படம்

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



செய்தித்தாள்களில் சொற்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு மௌனமொழி படங்களாகும். பத்திரிகையில் வரும் படமொழிகள் எவரும் விளங்கக்கூடயதான மொழியாகும். படமொழி நிறங்களையும், பாசைகளையும் இனங்களையும் கண்டங்களையும் கடந்த ஒரு மொழியாகும். கண்பார்வையையும் கவனத்தையும் சுண்டியிழுக்கின்றன. கவனத்தை சிதறவைக்காது கருத்தினை தெளிவாக நிலைநிறுத்துகின்றன. விளக்கத்தையும் விவரணத்தையும் பார்த்த மாத்திரத்திலேயே பகிர்ந்தவிடுகின்றன. என்ன படம்? எப்படிப்படம்? என்ற கேள்விகளுக்கு அங்கு இடமிராது கற்றலும் அறிதலும் கணப்பொழுதில் கணிரென இடம்பெறுகின்றன. நம்பிக்கைத்தன்மையை நம்மில் இருத்துகின்றன. பத்திரிகையில் படங்கள் என்னும் போது புகைப்படங்கள் மட்டுமல்லாது 'கருத்துப்படம், கேலிச்சித்திரம், வரைபடம். படக்கதை, தொடர்படங்கள்," எனப்பல வகைகளில் என வெளிவருவதைக் காணலாம்.

இந்தவகையில் இன்று 'கருத்துப்படம்" பற்றி நோக்குவோம்: 

கருத்துப்படம் 

“ Cartoon என்ற ஆங்கிலச் சொல்லிற்குக் பத்திரிகை உலகில் இன்று பலரும் பொதுவாக  கேலிசித்திரம் என்று பொருள்படக் கூறுகின்றனர். இதற்கு இன்னொரு சொல்லாகக் ‘கருத்துப்படம்’ என்று ஒன்றை ‘கார்ட்டூனிஸ்ட் டுகள்’ கூறுகின்றனர். ஆனால் ஆங்கில அகராதியை ஆழமாக நோக்கும் போது அடிப்படையில் கேலிச்சித்திரம், கருத்துப்படம் என பயன்படுத்தப் படும் இந்த இரண்டும் சொற்பதங்கள் வேறுபட்ட வரைபடங்களேஎன அறிய முடிகின்றது:Cartoon-கருத்துப்படம்"என்றும், Caricature-கேலிச்சித்திரம்" என்றும் அறிய முடிகின்றது. ஆனால் இவ் இரண்டும் தமிழில் ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது போல் இன்று எமக்குத் தோன்றுகின்றது, கேலிச் சித்திரம், கருத்துப்படம் என்ற இரு வகைக்கும் ஒரே சொல்லாகக்  கார்ட்டூன் என்ற ஆங்கிலச் சொல்லாக்கத்தையே பயன்படுத்தி வருகின்ற னர்.

நடந்த நிகழ்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களை விட ஒரு கருத்துப்பட ஓவியன் வரையும் (கார்ட்டூன்) கருத்துப்படமே இன்று அதிக செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது என்பதும் உண்மையே. இதற்கு உதாரணமாக: 'அமெரிக்காவில் கட்சி விவகாரங்களில் பெரிய ஊழல் சக்தியாக டம்மானிஹால் அமைப்பைப் கவிழ்த்து விடும் அளவிற்குப் பெரிய அளவில் செல்வாக்குப் பெற்று தாமஸ் நாம்ஸின் கருத்துப்படங்கள் விளங்கின" என்பதை இங்கு சுட்டிக்ட காட்டுவது சாலப்பொருத்தம். 

கருத்துப்படம் – தோற்றம் மற்றும் விளக்கம்


கருத்துப்படங்களைப் பற்றிப்; பலவாறு விளக்கங்கள் வந்துள்ளன அவற்றுள் சில: 'கருத்துப்படம் என்பது நகைச்சுவை அல்லது ஒரு கருத்தை வலியுறுத்தி நாளிதழ்களிலும் பருவஇதழ்களிலும் வெளியிடப்படும் ஒரு வரைபடம் அல்லது தொடர்வரைபடமாகும்".பொதுவாக, கருத்துப்படம் கடின அட்டை யில் படம் வரைந்து அதை மாதிரியாகப் பயன்படுத்தித்திரைச் சீலையில் எண்ணெய் வண்ணத்தில் வரைப்படும் சுவர்க்கோல ஓவியமாகும். இந்த வகையான படங்கள் ஒத்த அளவுடையனவாக அலங்கரிக்கப்பட்ட சுவர்ப் பகுதிக்கு மாற்றப்படுகின்றன. இதைப்போன்றே 'கருத்துப்படம் என்பது ஒரு வகையான வரைபடம். ஒரு கதையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதாகும்" என்று பொதுவான சில கருத்துக்களை ஒட்டி விளக்கங்கள் பலராலும் தரப்பட்டுள்ளன. பழமையான கருத்துக்களைக் கொண்டு (Early Cartoons)  கருத்துப்படம் என்பதற்கு விளக்கம் கூறியுள்ளனர்.

நாளிதழில் வருகின்ற கருத்துப்படத்திற்கு 'கருத்துப்படம் ஒரு மனிதனின் உலகம் பற்றிய பார்வையாகும்" எனவும் விளக்கம் கூறுகின்றனர். கருத்துப் படம் ஒரு செய்தியினைப் பற்றி முழுமையாகச் சிந்திக்கச் செய்வதாகவும், தெரிந்து கொள்ளத் தூண்டுவதாகவும் அமைகின்றதாக, வரையறையும் செய்கின்றனர். இந்தத் தூண்டுகோலைக் கொண்டும், பின்னாளில் விளக்கம் தர முற்பட்டனர்.

'கருத்துப்படம் என்பது செய்தி விளக்கப்படமாகும். பத்திரிகைகளில் சொல்லப்படுகின்ற செய்திகள் பலவற்றில் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் செய்தி கருத்துப்படமாக வரையப்படுகிறது" இவ்விளக்கம் செய்தியைக் கருத்துருகொண்டு காணமுயலும் ஒரு கருத்துப்பட ஓவியனின் விளக்கமாக எடுத்தாளமுடியும். ஏனென்றால் கருத்துபட ஓவியன், தான் வரைகின்ற ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு செய்தியை உணர்த்த வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவனகா இருப்பான். 

இதை அடியொற்றியே இரத்தினச் சுருக்கமாக,'புரிந்து கொள்ள இயலாக் கருத்துக்களையோ, செய்திகளையோ எளிதாகப் புரிந்து கொள்ளவைக்க கருத்துப் படம் பாவிக்கப்படுகின்றது. கருத்துக்கள் மிக வேகமான மக்களிடம் சென்றடைய, வாசகர்கள் அதிக சிரமம் எடுக்காமல் செய்தியைக் கிரகித்துக்கொள்ள பத்திரிகைகள், இதழ்களில் கருத்துப் பொதிந்து வெளிவரும் வரைபடமாகும்"


'கருத்துப்படம் பெரும்பாலும் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறுவதாக இருக்கும் என ரவிராஜ் அவர்களால் கூறப்பட்ட இவ்விளக்கம் கருத்துப்படத்தின் கருவை உள்ளடக்கிய விளக்கமாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 'கருத்துப்படம் என்பது நடப்பு நிகழ்ச்சி களைப் படங்களாக வரைந்து, ஒரு சில வரிகளில் கருத்தையும் விளக்கி, மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதாக இருக்கிறது" என்கின்றார் இதழியல் பேராசிரியை கலைவாணி.

'ஒரு செய்தியை, தனது சொந்தக் கருத்துக்களைக் கொண்டு சொற்களாக விளக்கும் போது அது ஷஆசிரியர் தலையங்கம்| எனவும் கூறப்படுகிறது. நாளடைவில் கருத்தைக் கொண்டு வெளியாகின்ற படங்கள் 'படத்தலை யங்கம்"- ' படஆசிரியர்தலையங்கம்" என எமது நாட்டில் கூறலாம் போலும். படத்தலையங்கம் என்று கூறப்படும் கருத்துப்படம் அடிக்குறிப்பு இல்லாமலேயே கருத்துத் தெரிவிப்பது" என்ற விளக்கத்தையும் குறிப்பதாக அமைகின்றது. ஆசிரியர் தலையங்  கத்திற்கு படம் வரையப்படும் போது கருத்துப்படம் படத்தலையங்கம் எனவும் அழைக்கப்படும். கருத்துப் படங்கள் பத்திரிகையில் ஆசிரியத்தலையங்கத்தின் முக்கியத்தைப் பெறுகின்றன.  

இவ்வாறு கருத்துப்படத்திற்குக் தரப்பட்டுள்ள விளக்கங்களைத் தொகுத்துச் சுருக்கமாக நோக்கும் போது பின்வரும் பொதுவான கருத்தினைப் நாம் பெறலாம்.


கருத்துப்படம் என்பது ஒரு வரைபடம் ஆகும். அது தொடர் வரைபடமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.  கருத்துப்படம் ஒரு செய்தி விளக்கப் படமாகும். அது நடப்பு நிகழ்வுகளின் ஏதாவது ஒரு கருத்தை உள்ளீடாகக் கொண்டு வரையப்படுவதாகும். அந்தக் கருத்து மக்களைச் விரைவில் சென்றடைய வேண்டும். அந்த வகையில் புரிந்துகொள்ள இயலாத கருத்துக்களையோ, செய்திகளையோ எளிதாகப்படங்களின் மூலம் புரிய வைப்பது என்பது இந்த கருத்துப்படத்தின்  தன்மையாகும். ஆத்துடன் விறுவிறுப்பாக இருப்பதற்காக, அரசியல் கருத்தாக்கங்களைச் சார்ந்தும்,  சமூகச் சீர்திருத்தக் கருத்தாக்கங்களை வெளிக்காட்டுவதாகவும் இருக்கும். சிரிப்பைக் கொண்டு சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கும் என்றும் கூறலாம். சில வினாடிகளுக்குள், படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே கருத்தை உணரத்தக்கதாக இருக்கும் கருத்துப்படம் அன்றாட நடப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாகக் கருத்துச் செறிந்ததாக இருக்கும். இத்தகைய கருத்துப்படங்களை பத்திரிகைகள் இதழ்கள் இன்று விரும்பி வெளியிடுகின்றன.


தொடரும்…




உசாத்துணை நின்றவை:-

  1. அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளை, பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. முனைவர்: ச.ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகே~ன், சென்னை600004.
  3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D, Accessed on 16.05.2020
  4. http://www.muthukamalam.com/essay/general/p139.html,Accessed on 16.05.2020
  5. https://archives.cjr.org/behind_the_news/newspapers_are_killing_cartoon.php,Accessed on 16.05.2020
  6. http://thiru2050.blogspot.com/2010/07/blog-post_9641.html?m=1,Accessed on 16.05.2020






No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff