பத்திரிகையில் உள்ளடக்கப்படக் கூடிய தகவல் கட்டமைப்புக்களுள் கேலிச்சித்திரம்.
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
பிரபல ஊடகவியலாளர் ரவிராஜ அவர்கள் ‘Cartoon’ ‘கார்ட்டூன்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குக் கேலிசித்திரம் என்று பொருள்" என்கிறார். இதற்கு இன்னொரு சொல்லாகக் ஷகருத்துப்படம்| என்ற ஒன்றை (கார்ட்டூனிஸ்ட்டுகள்) கேலிசித்திரம் வரைபவர்கள் உருவாக்கியுள்ளனர். கேலிச்சித்திரம், கருத்துப்படம் எனும் இரண்டும் வேறுபட்ட வரைபடங்களே. இவை இருவேறுபட்ட வடிவங்களைக் கொண்டுள்ளதைக் கண்டு, பின்னாளில் கேலிச்சித்திரம் (Caricature), கருத்துப்படம் என்ற முறையான பாகுபாட்டை உணர்த்திக்காட்டலாம் என அறியப்பட்டது. இனுப்பினும் இந்த முடிவு முடிந்த முடிவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் ஏற்றுக் கொள்ளப் படாமலும் இருந்தது. பின்நாள்களில் கேலிச்சித்திரம், கருத்துப்படம் என்ற இரு வகைக்கும் ஒரே சொல்லாகக் ‘கார்ட்டூன்’ என்ற ஆங்கிலச் சொல்லாக்கத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
'இயல்பான மனிதனின் தோற்றத்தை மிகைப்படுத்திக் கேலியும் கிண்டலுமாக வரைபடத்தின் மூலம் வெளிக்காட்டுவது கேலிச்சித்திரமாகும்" கேலிச்சித்திரம்-கார்ட்டூன்(cartoon) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவை அங்கதச்சுவையைத் தூண்டும் வகையில் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். பல்லாயிரம் சொற்களில் உணர்த்த முடியாத விடயத்தை கேலிச்சித்திரங்கள் மிகஎளிதாக உணர்த்திவிடுகின்றன.
கேலிச்சித்திரம் என்பது ஒரு கலை வடிவம். அத்துடன் அது இன்று பிரபலியமாகவும் வளர்ந்து விட்டது. அது நுட்பமான கலை அம்சங்களைக் கொண்டது. இக்கலைவடிவத்தின் சிறப்பான தன்மை அதற்கு மொழிபேதமோ, எழுத்தறிவுபேதமோ இல்லை என்பது ஒரு சாதாரன சொல்லல்ல. கேலிச்சித்திரங்களை ஆக்குவதற்கு விசேட தனித்துவமான திறமைகள் தேவைப்படினும் அவற்றைப் பார்த்து இரசிப்பதற்கோ, விளங்கிக்கொள்வதற்கோ, மொழியறிவு தேவையில்லை. இதனால் எந்த மொழிபேசுபவர்களாலும் கேலிச்சித்திரங்களை விளங்கிக்கொள்ள முடியும். பத்திரிகை மட்டுமல்லாது தொலைக்காட்சி, திரைப்படங்கள், இணையப்பத்திரிகைகைள் போன்றவற்றிலும் இவை செல்வாக்குச் செலுத்தகின்றன.
தொடக்கத்தில் கோட்டுச் சித்திரங்களால் உருவான கேலிச்சித்திர அமைப்பு முறை இன்று வளர்ச்சியடைந்து சில எழுத்துக் குறிப்புக்களையும் தாங்கி வெளிவருகின்றன.
அரசியல், பொருளாதாரம், சமையம்(சமயம்), சமுதாயம், பிரபலங்கள், தனிநபர் நடத்தைகள், குணாம்சங்கள் போன்றவற்றை பிரதிபலித்த கேலிச்சித்திரங்கள் இன்று விகடத்துணுக்குகளாகவும் கதை வடிவங்களாகவும் வளர்துவருகின்றன. அத்துடன் அத்துறைகளில் இடம் பெறுகின்ற குறைகள், ஊழல்கள் சூழ்ச்சிகள் போன்றவற்றை அங்கதச்சுவையுடன்-நகைச்சுவையுடன் உணர்த்தும் விதமாக கேலிச்சித்திரங்கள் வரையப்படுகின்றன. இத்துடன் விளம்பரங்களுக்கும் பயன்படுமளவிற்கு கேலிச்சித்திரங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.
கேலிச்சித்திரங்களின் தோற்றம்
ஐரோப்பியவின் சமூக மறுமலர்ச்சியின் பலனாக கேலிச்சித்திரங்களும் 17ஆம் நூற்றாண்டளவில் இத்தாலியில் தோற்றம் பெற்றது எனப்படுகின்றது. பின்னர் ஜேர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியும் உள்ளது. இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் கேலிச்சித்திரம் என்ற சொல் இன்று நாம் பொருள்கோடல் செய்வது போல் இருக்கவில்லை. மறுமலர்ச்சிக் கால ஓவியவரை கூடங்களில் ஓவியம் அல்லது சுவரோவியம் அல்லது திரையோவியம் போன்றவற்றை வரைவதற்கு முன்னர் வரையப்படும் (sketch map) ஆயத்த வரைவினையே கார்ட்டூன்-Cartoon என அழைத்தனர்.
கார்ட்டூன்கள் நெதர்லாந்து நாட்டில் தான் முழுவடிவம் பெற்றன என்கிறார்கள். இத்தாலி மொழியில் கார்ட்டூன் என்பது தடிப்பான காகிதங்களை குறிக்கும். தடிப்பான காகிதங்களில் தான் ஆரம்ப காலத்தில் ஓவியங்கள் வரைவார்கள்.
இன்னுமாக கேலிச்தித்திரம் என்ற கலைவடிவம் 1865ஆம் ஆண்டளவில் சமூக மறுமலர்ச்சிக் காலத்திலேயே தோற்றம் பெற்றதாக அறிய முடிகின்றது. இக்காலத்திற்கு முன்னர் (1865ஆம் ஆண்டிற்கு) இது ஒருவித கோட்டுச் சித்திரக்கலை என அழைக்கப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த அகஸ்தினோகரிக்கி என்பவர் 16நூற்றாட்டில் கரிக்கச்சா (carricatare) (caricature) என்னும் கோட்டுச்சித்திரக் கலையில் பிரபல்யம் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது. இன்னும் 16,17 நூற்றாண்டுகளில் இங்கிலாந்து பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கோட்டுச் சித்திரக் கலை வளர்சியடைந்து வந்துள்ளது.
19 நூற்றாண்டிலேயே கோட்டுச்சித்திர வடிவம் அதன் பணி, தன்மை நோக்கி கேலிச்சித்திரம் என்னும் வடிவமைப்பை பெற்று வளரத்தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டில்தான் கார்ட்டூன் என்ற சொல் இன்று பயன்படுத்தப்படும் கேலிச்சித்திரம் என பொருள்கோடலை - அர்த்தத்தைப் பெற்றுள்ளது. பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்க ஓவியர்களி டையே போட்டியொன்று 1921ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதில் சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ‘பஞ்ச் Cartoon என்ற பெயரில் பிரசுரித்தது. காலப்போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.
அங்கதச்சுவைக்கும் (சிலவேளை நிந்தாஸ் சுவைக்கும்) அப்பால் சென்று பொருள் கோடல்களை-கருத்துருவாக்கங்களை செய்வதால் கேலிச்சித்திரங்கள் பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங் கத்திற்கு நிகரானவை எனலாம். ஒரு குறித்த கருத்தினை நகைச்சுவை உணர்வுடன் மக்கள் மத்தியில் தெளிவானதாக ஊட்டுவதற்கு, கொண்டு சேர்ப்பிப்பதற்கும் ஒரு சிறந்த ஊடகமாக காணப்படுகின்ற கேலிச்சித்திரங்கள் புதுப் பொலிவு பெற்று வருகின்ற ஒரு கலை வடிவம்.
அச்சு ஊடகத்துறை வரலாற்றில் 16நூற்றாண்டு ஒரு திருப்புமுனையான காலப்பகுதி என கருதுகின்றார்கள். அமெரிக்க ஊடகத்துறை வரலாற்றில் முதலாவது கேலிச்சித்திரத்தினை வரைந்தவராக பெஞ்சமின் பிராங்கிளின் கணிக்கப்படுகின்றார். இங்கிலாந்து நாட்டிற்கு எதிராக புரட்சிகரமான கேலிச்சித்திரங்களை இவர் வரைந்துள்ளார்
இலங்கையில் சுமார் நான்குதசாப்தங்களிற்கு முன்பிருந்தே பிரபல பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸிலிருந்து பிரசுரமாகின்ற ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி நியுஸ், ஒப்ஸ்சேவர் போன்றவற்றில் கருத்துக்கள் பொதிந்த கேலிச்சித்திரங்கள் வெளிவந்து கொண்டிருப்பதை நாம் அறியகூடியதாக உள்ளது. இலங்கைப் பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்கள் பெருமளவில் வெளிவருவதை இன்றும் அவதானிக்க முடிகின்றது.
செய்தித்தாள்களின் உள்ளடக்கக் கூறுகளில் ஒன்றான செய்திகளின் செல்வாக்கு செழித்திருந்த காலகட்டம் சென்றுபோய் அதில் கேலிச்சித்திரங்கள் விஞ்சி வருகின்றன. கேலிச்சித்திரம்வரையும் அரிமக்களின் துரிகையின் சித்திர சாகசங்களான கேலிச்சித்திரம் முத்தான கருத்துரைக்கின்றன. சமூகத்திற்கு சத்தான சிந்தனைகளை சித்தரிக்கும் கேலிச்சித்திரங்கள் ‘கார்ட்டூனிஸ்ட்டுகளின்’ கலைமுத்துக்கள்.
இந்த கேலிச்சித்திரங்களின் வகைகள், கருத்துருவாக்கம், பேசுபொருள் போன்றன தொடர்பான விடயங்களை அடுத்த பிரசுரிப்பில் பார்ப்போம்.
உசாத்துணை நின்றவை:-
உசாத்துணை நின்றவை:-
- https://www.canadamirror.com/world/04/162817, Accessed on 14.05.2020
- https://wecommunication.blogspot.com/2018/10/importance-of-cartoons.html,Accessed on 14.05.2020
- https://askopinion.com/do-you-love-daily-cartoons-in-newspapers, Accessed on 14.05.2020
- http://ignited.in/a/55931, Accessed on 14.05.2020
- தமிழ் மொழியும் இலக்கியமும், தரம் 11, இரண்டாம் பதிப்பு-2008, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை.
- https://tamiljournalism.wordpress.com/2019/08/26/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be/, Accessed on 14.05.2020
- https://en.wikipedia.org/wiki/Cartoon, Accessed on 14.05.2020
- https://www.ukessays.com/essays/media/cartoon-entertainment-is-not-only-for-kid-media-essay.php, Accessed on 14.05.2020
No comments:
Post a Comment