Wednesday, May 13, 2020

'இலங்கையர் எமக்குள் சமாதானமும் சகவாழ்வும் உருவாக்க வழிவகுக்கும் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்" பாடசாலைகளில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசிய பாடமாகும்

ம.பிரான்சிஸ்க் -ஆசிரியர் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும், யா-பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை.
தொடர்பாடல் மனிதனுடைய அடிப்படைச் செயற்பாடுகளில் ஒன்றாகும். ஆள்களிடையே தொடர்புகளை உருவாக்குவதற்குத் தொடர்பாடல் அவசியமானது.'இருசாராரிடையே உணர்வுகள்,எண்ணங்கள், சிந்தனைகள், கருத்துக்கள், அபிப்பிராயங்கள், அபிநயங்கள், சமிக்ஞைகள், முகக்குறிகள், குரலொலிகள், குறியீடுகள், சைகைகள், தகவல்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றமை தொடர்பாடல்" எனக்கூறலாம். தொடர்பாடல் படிப்படியாக வளர்ந்து, இன்று வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் தொடர்பாடல் தொழில் நுட்பச்சாதனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றம்வரை விரிவடைந்து செல்கின்றது. தொடர்பாடலின் வளர்ச்சியால் உலகம் குடும்பமாகச் சுருங்கும் வண்ணம் மானுட இடைத்தொடர்புகள் வலுப்பெற்றுள்ளன. அன்றாடவாழ்வில் தொடர்பாடல் நுட்பங்களை அறிந்து, அதனை திறம்பட நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் அற்புதமாகச்செய்து முடிக்கமுடியும் என்பதை அறிந்து வைத்திருப்பது அனைவருக்கும் நன்மையே.
யுனெஸ்கோ அமைப்பின் குரூன்வெல்ட் பிரகடனம்:
கல்வி,அறிவியல்,பண்பாட்டு மற்றும் கலாசாரம்ஆகியவற்றைவளர்க்கும் ஐ.நா.வின் ஓர்அங்கமான யுனெஸ்கோ (UNESCO)அமைப்பினால் 1982ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குரூன்வெல்ட் பிரகடனத்தில் 'ஊடகத்தின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து சிறுவர்கள் மற்றும் இளையோர்களைப் பாதுகாத்தல் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. இங்கு, ஊடகவிளங்கறிவு மற்றும் விமர்சனரீதியாக ஊடகத்தைநுகரும் மதிநுட்பம் என்பவற்றோடு சிறுவர்களிடையே படைப்பாக்கச் சிந்தனையையும் வளர்க்கவேண்டும்" எனும்கருத்தும் உற்றுநோக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.'பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவிலிருந்து மாணவர்களுக்கு ஊடகக்கல்வி வழங்கவேண்டும்" என்று யுனெஸ்கோ அமைப்புபரிந்துரை செய்ததும் இதன் காரணமாகவேயாகும்.
தொடர்பாடலும் ஊடகக்கற்கையினை மாணவர்கள் கற்கும்போது ஊடகவிளங்கறிவு, மதிநுட்பம் மற்றும் விமர்சனரீதியாக ஊடகத்தைநுகரும் அறிவாற்றலுடன் செயற்றிறன்மிக்க தொடர்பாடுநராக இருப்பார்கள். சமூகமுன்னேற்றத்தில் முதுகெலும்பாக திகழும் தொடர்பாடல், படைப்பாக் கரீதியான சிந்தனை மற்றும் ஊடகத்தகவல் உருவாக்கம் செய்யும் ஆற்றல், அபிவிருத்திசார் மற்றும் ஜனநாயக சிந்தனையால் நிறைவான பிரஜையாகத் திகழத்தேவையான அறிவு, திறன், ஆற்றல் மற்றும் நற்பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஒரு மாணவரிடத்தில் உருவாக்கவல்லது. அதற்கு ஏற்ற வகையில் பாடவிடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இன்று ஒருவர் தான் சார்ந்து வாழும் சமூகத்துடன் வினைத்திறனான தொடர்பாடலை சாமர்த்தியமான முறையில் மேற்கொள்வதற்கு முடியாமல் போனதே முன்னேற்றங்கள் முட்டுக்கட்டை யாவதற்கு மூலகாரணமாகிறது எனலாம். சிறந்த, ஒழுக்கமான, வினைத்திறனான மானுட இடைத்தொடர்புகள் உருவாக்கவல்ல தொடர்பாடல் அனைத்துத் தொழில்துறைகளின் வெற்றிக்கும் அத்தியாவசியம். இதனால் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் தற்காலத்தில் பிரியோசனமானதுமாகும்.
ஒருவருடைய மிகமுக்கிய பிரச்சினைகளில் ஒன்று முறையான தொடர்பாடலைச் செய்யமுடியாமையே. இதனால் ஆள்களிடைத் தொடர்பு முறிவடைந்து வேண்டாதபாரிய உறவுவிரிசல்கள் குடும்பம், சமூகம், சமயம்,இனம் மற்றும் வேலைத்தளங்கள் வரை ஏற்படுவதற்குக் காரணமாகிறது. அத்துடன் இன்று எமது இலங்கைக்குள் இனங்களுக்கிடையே இனக்குரோதத்தையும் துவேசத்தையும் தூண்டிவிடுபவர்களாக மாறும் போக்கும், சமயங்களிடையே மதம் பிடித்தவர்களாக கருத்துக்களைப் பரிவர்த்தனை செய்பவர்களாக உருவாகப் பார்ப்பதும் வேதனைதருகின்றது. ஆனால் இவ் அழிவுச்செயல்களை விலக்கிச் சகவாழ்வுடன் வாழ்வதற்குப்பழகும் நிலைமையை உருவாக்குவதற்கு அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை நாம் மனதாரப்பாராட்டுகின்றோம். அரசின் இத்தொடர்செயற்பாடுகளுடன் பாடசாலைகளில் தொடர்பாடலும் ஊடகக்கற்கை யினை கட்டாயபாடமாக்கி மாணவர்களிடையே புரிந்துணர்வுடன்-சகவாழ்வுடன் கூடிய ஒரு நிலைமையை இலங்கைக்குள் உருவாக்க நாம் முன்வரவேண்டும்.
தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் கற்பதனால் மாணவருக்குக் கிடைக்கும் நன்மைகள்:-
மாணவர் தன்னுடைய அனுபவம், படைப்புத்திறன், ஆய்வுத்திறன் என்பவற்றின் ஊடாகத்தனக்குள் எழுகின்ற ஒருபுதிய சிந்தனையை, வெளிப்படுத்துவதற்குத் தொடர்பாடல் மிகஅவசியமானது. இச்செயன்முறையினை கச்சிதமாக மேற்கொள்வதற்குத் இப் பாடநெறி அற்புதமாக வழிகாட்டுகின்றது. மாணவரின் நடத்தைசார் அபிவிருத்தி எனும் பரிமாணத்தை நோக்குகையில் 'கல்வியின் இலக்கானது அறிகைசார் அடைவினை தொழில்சார் உலகுடன் தொடர்புபடுத்தலாக அமைகிறது". எனவே, பாடசாலைக்கு வெளியேயான உலகுடன், கற்பவர் தொடர்பு கொள்வதற்குத் தேவையான தகுதிப்பாடுகளை மேம்படுத்த இப்பாடநெறி அற்புதமாக வழிகாட்டுகின்றது. இப்பாடத்தினை அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரதான குறிக்கோளாக உயர் தொடர்பாடல் மற்றும் ஊடகத்தேர்ச்சியுடனான, சகவாழ்வுடன் வாழ்வதற்குப்பழகிய, நிலவுகின்ற தொடர்பாடல் மற்றும் ஊடகக்கலாசாரத்தை ஊடுருவிப்பார்த்து, தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யத்தயாரான இளம் சமுதாயத்தினரை உருவாக்குதல் என்பது அமைகிறது என தேசிய கல்வி நிறுவகம் கூறுகின்றது.
ஒரு மாணவர் சிறுபராயத்திலிருந்தே நேர்கணிய உளப்பாங்கு, புத்துருவாக்கச் சிந்தனை,விடாமுயற்ச்சி, குழுச்செயற்பாடு, அணைத்துஒழுகும் மனவளமை, ஆன்மீகம், ஒழுக்கம், வினைத்திறனான தொடர்பாடல், தார்மீக விழுமியங்கள், பன்முகத்தன்மையை மதித்தல், ஆற்றல்மிகு தொழில்தர்மம் போன்ற குடியியல் விழுமியங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும். இப்பண்புகளை உருவாக்குவதற்கு இப்பாடநெறி துணை புரிகின்றது. அதுமட்டுமல்ல ஒரு மாணவர் சிறுவயதிலிருந்துமுகாமைத்துவத்திலுள்ள 4A க்களில் (Attitude), உளப்பாங்கு. (Anolysis),பகுப்பாய்வு (Action),செயற்பாடுமற்றும் (Accountability) பொறுப்புக்கூறல் போன்றவற்றில் கவனஞ்செலுத்துவது கட்டயமாகும். இப்பாடநெறி இந்த 4யுக்களை அடைவதற்கு துணைபுரிகின்றது.
இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது நான்கு குறுக்குக்கலைத்திட்டக் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டாகும்: சௌஜன்யம், அபிவிருத்தி, ஊடகஅறிவு, தொடர்பாடற்தேர்ச்சி என்பவையாகும். இப்பாடத்தினைக் கற்றுக்கொள்வதனால் ஒரு மாணவரிடத்தில் பின்வரும் அடிப்படைத் தேர்ச்சிகளும் உருவாகுகின்றன: தொடர்பாடல் தேர்ச்சிகள்: எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திரஅறிவு, தகவல் தொழினுட் பத்தகைமை. ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்: ஆக்கம், விரிந்தசிந்தனை, தற்றுணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவித்தல், நுணுக்கமான மற்றும் பகுப்பாய்வுச்சிந்தனை,அணியினராகப் பணிசெய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள், கண்டுபிடித்தலும் கண்டறிதலும் முதலான திறமைகள்,நேர்மை, சகிப் புத்தன்மை, மனிதகௌரவத்தைக் கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள், மனஎழுச்சிகள், நுண்ணறிவு போன்றன.வேலை உலகிற்குத்தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள், சமயமும் ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சிகள்: அன்றாட வாழ்க்கையில் மிகப் பொருத்தமானவற்றைத் தெரிவு செய்யவும், நாளாந்த வாழ்க்கையில் ஒழுக்கநெறி, அறநெறி, சமயநெறி தொடர்பான நடத்தைகளைப் பொருத்தமான முறையில்மேற்கொள்ளவும் விழுமியங்களைத் தன்மயமாக்கிக்கொள்ளவதற்குத் துணைபுரிதல். சிந்தனையின் ஆக்கபூர்வமான வடிவத்தை விமர்சித்தல், ஆக்கபூர்வமான அவதானிப்புக்கள் தொடர்பான அனுபவங்களை வெளிப்படுத்தல், ஆக்கபூர்வமான கட்டுரையின் விசேடதன்மைகள் மற்றும் தன்மை யைச் சமநிலையில் காட்டுதல், ஆக்கபூர்வமான சித்திரங்கள், புகைப்படங்கள் மற்றும் கிரபிக் ஆக்கக் கலைகளின் தன்மையைச் சமநிலையில் காட்டுதல், ஆக்கபூர்வமான கட்டுரையின், நடிப்பின், பேச்சின் மற்றும் வாசிப்பின் அனுபவங்களைப் பகுத்தாய்தல் போன்றவற்றிற்குத் துணைபுரிதல்.
தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் பாடம் பாடசாலைகளில் அறிமுகம்:-
தொடர்பாடல் திறன்களின் முக்கியத்துவத்தையும், இலங்கையர்கள் தமக்குள் சகவாழ்வுடன் வாழும்போது பாரிய வளர்ச்சிகளை, அபிவிருத்திகளை எமக்குள் உருவாக்கமுடியும் எனபதாலோ அரசு இப்பாடநெறியினை பாடசாலைகள் மட்டத்தில் ஆரம்பித்துள்ளது. 2006லிருந்து தரம்-10லும்;, க.பொத.சாதரணதரத்தில் 2007லிருந் தும், 2008லிருந்து க.பொ.த.உயர்தரத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று எமது நாட்டில் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் சம்மந்தமாக பலபாடநெறிகள் பல்கலைக்கழகம், திறந்தபல்கலைக்கழகம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மட்டங்களில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. க.பொ.த. உயர்தரத்தில் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் பாடத்தை ஒருபாடமாக எடுத்துக் கற்றுக்கொள்வதற்கு க.பொத.சாதரணதரத்தில் இப்பாடத்திற்கு-C சித்தி பெற்றுக்கொள்ளவோ அல்லது இப்பாடத்தைக் கற்றிருக்க வேண்டிய கட்டாய தேவையோ இல்லை என அதிகாரபூர்வ ஏடுகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு:-
இலங்கைப்பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பட்டப்பயில் நெறிக்கான அனுமதி விபரங்களை விளக்கி வெளியிடும் கையேட்டின்படி இலங்கையில் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்; என்னும் பாடநெறிகள் கற்பிக்கப்பட்டு இளமாணிப்பட்டங்கள் வழங்கப்படுவருகின்றன. தற்காலத்தில் தொடர்பாடலும் ஊடகக்கற்கை யும் தொடர்பான பாடநெறிகள் களனிப்பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழக ஸ்ரீபாளி வளாகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் ஆகியவற்றில் நடைபெறுகின்றது.
அத்துடன் அரசினுடைய வர்தகமானி அறிவித்தலினூடாக இவ்வருடம் மார்ச்-27திகதி(27.03.2019 யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகத்தில் தனியான ஒருதுறையாக தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் உருவாக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் கடந்த வருடங்களில் கலைத்துறையில் ஒரு பட்டக்கற்கையாக மட்டும் இருந்துவந்த இப்பட்டப்படிப்பு தனித்துறையாக உருவாக்கப்பட்டுள்ளமை ஒரு வரப்பிரசாதமே. அவர்கள் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் என்னும் துறையில் இளமாணிப்பட்டங்களை (B.A. in Media Studies) வழங்குவதற்கு உழைத்த உள்ளங்களைப்பாராட்டித்தான் ஆகவேண்டும். இலங்கையில் அங்கீகரிக் கப்பட்டபல பல்கலைக் கழகங்களில் வியாபித்திருக்கும் இக்கற்கைநெறி டிப்ளோமா, பட்டப்படிப்பு, பொதுப்பட்டம், சிறப்புப்பட்டம், பட்டப்பின்படிப்பு மற்றும் முதுமாணிக்கற்கை என பல்வேறு மட்டங்களில் விருத்தி பெற்றுள்ளது சிறப்பாகும்.
கொழும்புபல்கலைக்கழக ஸ்ரீபாளி வளாகத்தினால் வழங்கப்படும் இக்கற்கைநெறிக்கான பட்டமாக வெகு ஜன ஊடகத்தில் இளமாணி சிறப்புப்பட்டம்-B.A. Special Degree in Mass Media ஆகினயை அமைகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தொடர்பாடல் கற்கைகள் நெறியின் பின்வரும் இருபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது: தொடர்பாடல் கற்கைகள் இளமாணிப்பட்டம். (B.A. in Communication Studies) மற்றும் மொழிகளில் இளமாணிப்பட்டம் ((B.A. in Languages)) போன்றன அமைகின்றன.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் இக்கற்கை நெறியினை கற்று பட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனைவிட இலங்கை பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் கற்றும் பட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
களனிப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் இளமாணிக் கௌரவ சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் [(BAHons (Peace and Conflict Resolution)] பட்டத்திற்கு க.பொ.த.உயர்தரத்தில் உள்ள பாடங்களில் மூன்றில் ஒன்றாக ஒருவர் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்; என்னும் பாடத்தையும் கற்று அப்பாடத்தில் குறைந்தபட்ச சாதாரண சித்தியான-S சித்தி மட்டுமே பெற்றுக்கொண்டாலே போதுமானது என அதிகார பூர்வ ஏட்டிலிருந்து தெரிய வருகின்றது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் இளமாணி இஸ்லாமியக் கற்கைகள் பட்டத்திற்கு க.பொ.த.உயர்தரத்தில் உள்ள பாடங்களில் மூன்றில் ஒன்றாக தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்; என்னும் பாடத்தையும் கற்று குறைந்தபட்ச சாதாரண சித்தியான-S சித்தி பெற்றுக் கொண்டாலே போது மானது என அதிகாரபூர்வ ஏட்டிலிருந்து தெரியவருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக்கல்லூரியால் வழங்கப்படும் சங்கீதம்,நடனம், சித்திரமும் வடிவமைப்பும் கற்கை நெறிகளுக்கான நுண்கலைப் பட்டங்களுக்கு (Bachelor of Fine Arts) க.பொ.த.உயர்தரத்தில் உள்ள பாடங்களில் மூன்றில் ஒன்றாக தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்; என்னும் பாடத்தை கற்று குறைந்தபட்ச சாதாரண சித்தியான-S சித்தி பெற்றுக்கொண்டாலே போதுமானது என அதிகார பூர்வ ஏட்டிலிருந்து தெரியவருகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கமும், கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் நெறிகளுக்கான நுண்க லைப் பட்டங்களுக்குக் க.பொ.த.உயர்தரத்தில் உள்ள பாடங்களில் மூன்றில் ஒன்றாக தொடர்பாடலும் ஊட கக்கற்கையும்; என்னும் பாடத்தையும் கற்று அப்பாடத்தில் குறைந்தபட்ச சாதாரண சித்தியான-S சித்தி பெற்றுக்கொண்டாலே போதுமானது என அதிகாரபூர்வ ஏட்டிலிருந்து தெரியவருகின்றது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளமாணிப்பட்டங்கள்:-
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூகப்பணி, புவியியல் தகவல் விஞ்ஞானம் என்னும் கற்கைநெறிகள் இளமாணிப்பட்டங்களை வழங்கிவருகின்றன: சமூகப்பணி இளமாணி கௌரவப்பட்டம் - Bachelor of Social Work Honours- BSW(Hons), புவியியல் தகவல் விஞ்ஞானத்திற்கான விஞ்ஞானமாணி கௌரவப்பட்டம் (Bachelor of Science Honours in Geographical Information Science). இவ்பட்டங்களுக்கு க.பொ.த. உயர்தரத்தில் உள்ளபாடங்களில் மூன்றில்ஒன்றாக தொடர்பாடலும் ஊடகக்கற்கையினை கற்று குறைந்த பட்ச சாதாரண சித்தியான-ளு சித்தி பெற்றுக்கொண்டாலே போதுமானது என அதிகாரபூர்வ ஏட்டிலிருந்து தெரியவருகின்றது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உள்ள பாடங்கள்:-
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உள்ள பாடங்கள் ஆறு முக்கிய பிரிவுகளுள் வகுக்கப்பட்டருக்கின்றன: கலைப்பிரிவு, வணிகவியல்பிரிவு, உயிரியல் விஞ்ஞானப்பிரிவு, பௌதிக விஞ்ஞானப் பிரிவு, பொறியல் தொழில் நுட்பப்பிரிவு, உயிர் முறைமைகள் தொழில் நுட்பப்பிரிவு என்பன ஆகும். தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் எனும் இக்கற்கைப்பாடம் கலைப்பிரிவு, வணிகவியல்பிரிவு, பொறியல் தொழில் நுட்பப்பிரிவு, உயிர் முறைமைகள் தொழில் நுட்பப்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளில் உள்ளபாடச் சேர்மானங்களில் உள்ளடக்கி ஒரு மாணவர் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாடமாகும்.
க.பொ.த உயர்தரத்தில் ஒரு மாணவர் கலைப்பிரிவுனுள் கற்கக்கூடிய பாடங்களை நான்கு தொகுதிகளாகப் பிரித்திருக்கின்றார்கள்: சமூகவிஞ்ஞானம்-பிரயோகசமூகக்கற்கைகள்,சமயங்களும் நாகரீகங்களும், அழகியற் கற்கைகள், மொழிகள் என்பன அந்தநான்கு தொகுதிகளும் ஆகும், இவற்றினுள் காணப்படும் சமூக விஞ்ஞானம், மொழிகள் தொகுதிகளுக்குள் இருந்து மட்டுமே ஒரு மாணவர் தனது பாடச்சேர்மானங்களில் அவர் விரும்பிய மூன்று பாடங்களையும் இணைத்துக் கற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு கற்றுக்கொள் ளும்போது மட்டுமே அவர் பல்கலைக்கழக நுழைவிற்கான ஆரம்ப அடிப்படைத் தகமையைப் பெறுகிறார். எனவே சமயங்களும் நாகரீகங்களும், அழகியற்கற்கைகள் பிரிவுகளுக்குள்ளும் இருந்து ஒரு மாணவர் இருபாடங்களைத் தெரிவு செய்யவாராயின் கட்டாயம் அவரது மூன்றாவது பாடம் சமூகவிஞ்ஞானப் பிரிவுகளுக்குள் ஒரு பாடமாக இருக்கவேண்டும். தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்; என்னும் பாடம் இந்த சமூகவிஞ்ஞானம் பிரிவினுள் ஒரு பாடமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. க.பொ.த.உயர்தரத்தில் கலைப்பாடப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் 27 வகையான கற்கை நெறிகளுக்கும் அனுமதியை நாடலாம். மேலதிக விபரங்களுக்கு- இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டப்பயில் நெறிக்கான அனுமதிஎன வெளியிடும் கையேட்டின் தெளிவாக கூறப்பட்டுள்ளது (ENGLISH HANDBOOK 2018-2019,page 38, தமிழ்- பக்கம்41)
Z புள்ளி:-
இப்பாடத்திற்கான-Z புள்ளி எனப்படும் பல்கலைக்கழகத்திற்கான தெரிவுப்புள்ளி உயர்வாக காணப்படுதும் ஒரு வரப்பிரசாதமே என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
தொழில் நுட்பப் பிரிவு பாடங்கள்:-
இப்பிரிவினுள் பொறியல் தொழில் நுட்பப் பிரிவு, உயிர் முறைமைகள் தொழில் நுட்பப் பிரிவு என இரு பிரிவுகள் உண்டு. இப்பிரிவின் கீழ் பல்கலைக்கழக அனுமதிக்காக க.பொ.த. உயர்தரத்தில் பரீட்சையில் அதற்கே உரிய இருபாடங்களுடன் மூன்றாவதாக க.பொ.த.உயர்தரத்தில் தொடர்பாடலும் ஊடகக்கற்கையினைக் கற்று அதற்கு ஆகக்குறைந்தது சாதாரண-S சித்தி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
இத்துறையின் கீழ் கற்றவர்கள் இன்னும் 18 வகையான பட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு- (ENGLISH HANDBOOK 2018-2019 -page 37 தமிழ்-68 பக்கம்).
வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் அறிவுரைகள்:-
இங்கு வடக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தினால் 07.12.2018அன்று திகதியிடப்பட்டு வலிகாம வலய அதிபர்களின் கவனத்திற்காக என்னும் பாடசாலைகளுக்கான கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் முக்கியமான ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுவது சாலச்சிறந்தது: பாடசாலையில் தொடர்பாடலும் ஊடகக்கல்வியும் பாடத்தை நடைமுறைப்படுத்தல் என்னும் தலைப்பில் வெளிவந்த அக்கடிதத்தில்: க.பொ.த.உயர்தர கலைத்துறையில், தொழினுட்பவியல் துறையில் ஒருபாடமாக தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் பாடத்தை மாணவர்கள் தெரிவு செய்வதற்கு ஊக்குவித்தல் என்பதாகும்.
யாழ்மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகள் இப்பாடத்தினை தமது மாணவர்களுக்கு கற்பிக்கின்றார் கள் என்பது வரவேற்கத்தக்க ஒருவிடயம். யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வடமராட்சி, தென்மராட்சி வலயங்களே இப்பாடநெறியை தமது பாடசாலைகளில் கற்பிக்காத வலயங்களாகக் காணப்படுகின்றன. இன்று இத்துறையில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பல பாடசாலைகளில் இக்கற்கை நெறியினை கற்பிக்கின்றார்கள். ஆயினும்; இப்பாடத்துறை ஆசிரியர்கள் இல்லாதபோதும் இப்பாடத்தின் முக்கியத்து வத்தினை உணர்ந்த அதிபர்கள் தமது பாடசாலைகளில் வேறுதுறைப்பட்டதாரி ஆசிரியர்களை வைத்துக் கொண்டு இப்பாடத்தினைக் கற்பித்துவருகிறார்கள் என்பதும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
பலவித பாடப்பிரிவுகளிலிருந்து மாணவர்கள் தகுதி பெறக்கூடிய கற்கைகள்:-
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டப்பயில் நெறிகளுக்கான அனுமதி தொடர்பான விளக்கங் களை தெளிவுபடுத்தும் உத்தியோகபூர்வ கைநூலில் உள்ளவற்றில் குறிப்பாக சிலவற்றை இங்கும் குறிப்பி டுவது நல்லது. சட்ட இளமாணிப்பட்டம், மொழிபெயர்புக் கற்கைகள் இளமாணிப்பட்டம், கட்டடக்கலை இள மாணிப்பட்டம், நிலத்தோற்றக் கட்டடக்கலை இளமாணிப்பட்டம், நவநாகரிக வடிவமைப்பில் இளமாணி பட்டம்(கௌரவ) ( B Des Hons), வடிவமைப்பு கௌரவ இளமாணி (Bacholor of Design Honours)-(இக்கற்கை நெறி மூன்று சிறப்பு தெரிவுகளை உள்ளடக்கியது. அதனுள் ஊடக மற்றும் தொடர்பாடல் வடிவமைப்பும் ஒன்றாகும். இதன்கீழ் பின்வருவனவும் அடங்குகின்றன: கிரபிக் வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு, நகரும் படம் வடிவமைப்பு மற்றும் மனிதன் கணினி தொடர்பாடல் வடிவமைப்பில் திறன்களை விருத்தி செய்தல்). பீ.எஸ்சி. முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும், பீ.பீ.எம். தொழில் முயற்சியும் முகாமைத்துவமும், கைத்தொழில் தகவல் தொழில்நுட்ப இளமாணிபட்டம்(BIIT), பீபீஎம் விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச் சிகள் முகாமைத்துவம், பீ.எஸ்சி. உடற்றொழில் கல்வி(சிறப்பு), பீ.எஸ்சி. விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும், பீ.எஸ்சி. தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்(கௌரவ), சுற்றுலா முகாமைத் துவத்தில் விஞ்ஞான இளமாணி(சிறப்பு) மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் விஞ்ஞான இளமாணி (சிறப்பு), தகவல் முறைமைகள் விஞ்ஞான இளமாணி பட்டம், திரைப்படமும் தொலைக்காட்சி கற்கைகள் இளமாணி(சிறப்பு), ப.Pபீ.எம். செயற்திட்ட முகாமைத்துவம்(பொது), சமூகப்பணி இளமாணி கௌரவப் பட்டம், புவியியல் தகவல் விஞ்ஞானத்திற்கான விஞ்ஞானமாணி கௌரவப்பட்டம் போன்ற இளமாணிப் பட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக பல்கலைக்கழக அனுமதிக்காக க.பொ.த உயர்தரத்தில் ஒருபாடமாக தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்; என்னும் பாடத்தினையும் கற்று அதற்கு ஆகக்குறைந்தது சாதாரண-S சித்தியினைப் பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
அரச நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புக்கள்:-
தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் என்னும் கற்கைநெறியினை ஒரு மாணவர் கற்றுக் கொள்வதனால் அரச நிறுவனங்களான: மாவட்டசெயலகம், பிரதேசசெயலகம் பிரதேசசபை, வைத்தியசாலை, பொலீஸ் பிரிவுகள் இவற்றுடன் இன்னும் பல அரச நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புக்கள் சிலவற்றை முதலில் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்: தொடர்பாடல் மற்றும் வெளிக்களப்பணிகள் தலைவர். நிறுவனத்தின் மேலதிகாரி, நிறைவேற்றுப்பணிப்பாளர், நிறுவனமுகாமையாளர், மனிதவள முகாமையாளர்கள், வெகுசனத் தொடர்பு அதிகாரி பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர், தகவல்தொடர்பு உத்தியோகத்தர், ஊடகத்தொடர்பு அதிகாரி, ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர், மக்கள் தொடர்பு உத்தியோகத்தர், பொதுமக்கள் உறவுகள் நிபுணர்கள், கூட்டங்கள் ஒருங்கிணைப்பாளர், ஊடகத்திட்டமிடலாளர், சுகாதாரகல் வியாளர்கள்-உத்தியோகத்தர்கள், ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் மற்றும் ஆவணமாக்கல் அதிகாரிகள், பொலீஸ் ஊடகப்பேச்சாளர், பொலீஸ் இணையச் செய்தியாளர், செய்திப்புலனாய்வாளர், ஊடகஇணைப்பாளர், முதன்மைத்தகவல் அலுவலகர்,தகவல் அலுவல கர், உதவித்தகவல் அலுவலகர், கல்லூரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். அரச பாடசாலை களில் ஆசிரியர்கள், இவைதவிர அரச ஊடக நிறுவனங்களில் உள்ள வேலைவாய்புக்கள். இவற்றைவிட இன்னும் பலபதவிகள் பணிக்காக காணப்படுகின்றன: தேடுதல் பிரிவின் தலைவர், ஆய்வு உத்யோகத்தர், குடும்ப உதவித்தலைவர்,குடும்பஉதவி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், அபிவி ருத்தி உதவியாளர், பாதுகாப்புத்தலைவர், நிறுவன அதிகாரிகளின் தனிப்பட்ட செயலாளர்கள், இவை தவிர ஒரு பட்டதாரிக்குப் பொருத்தமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வேலைவாய்புக்கள் போன்றன ஆகும்.
எனவே இப்போதும்-எதிர்வரும் காலங்களில் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் என்னும் கற்கை நெறி ஊடாக இளமாணிப்பட்டம் பெற்றவர்களுக்கே இப்பதவிகளில் வேலைகள் வழங்கப்படும் என்பது தெரிய வருகின்றது. ஏனெனில் இப்போது அரச வர்த்தகமானி அறிவித்தலில் இப்பதவிகளுக்கான தகைமைகளின் கீழ் படிப்படியாக தொடர்பாடல் இளமாணிப்பட்டம் தேவை என தெளிவாக கோரப்படுவதை நாம் காண முடிகின்றது.
தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புக்கள்:-
கற்கைநெறியினை ஒரு மாணவர் கற்றுக் கொள்வதனால் தனியார் துறைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய வேலைவாய்ப்புக்கள்: ஐ.நா சபை நிறுவனங்களின் ஊடக-தொடர்பாடல் இணைப்பாளர்கள், (இலங்கiயிலும் வெளிநாடுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்). மற்றும் சர்வதேச, உள்ளநாட்டு தனியார் நிறுவனங்களில் (INGOs,NGOs) மேலே அரச நிறுவனப்பதவிகளில் நாம் குறிப்பிடப்பட்டவற்றுடன் மேலதிகமாக ஊடகதிட்ட மிடலாளர், சமூகஊடக முகாமையாளர், வணிக நிருபர்கள், விற்பனைபிரதிநிதிகள், தொடர்பாடல் மற்றும் நிதிதிரட்டும் முகாமையாளர்கள், சந்தைப்படுத்தல் முகாமையாளர், உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர், தனிப்பட்ட செயலாளர்கள். தனியார் பாடசாலை யில் ஆசிரியர்கள், இவைதவிர தனியார் ஊடக நிறுவனங்களில் உள்ள வேலைவாய்புக்கள் என்பன ஆகும்.
தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்; பாடத்தினை ஆரம்பிக்கும் முறைகளில் ஒன்று:-
இப்பாடநெறி இலங்கைக் கலைத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்ட ஒரு பாடநெறியாகும். இப்பாடம் இலங்கையர் எமக்குள் சமாதானமும் சகவாழ்வும் உருவாக்க வழிவகுக்கும் ஒரு சிறந்த பாடமாகவும் உள்ளது என்பதனை நாம் உணரவேண்டும். இப்பாடநெறியைத் தமது மாணவர்களுக்குக் கற்பிக்க விரும்பும் அதிபர்கள் இத்துறையில் பட்டம் பெற்றபட்டதாரி ஆசிரியர்கள்தான் வேண்டும் என்று தட்டிக்கழிக்காது முதலில் தரம்-10இல் உள்ள மாணவர்களுக்கும் இப்பாடநெறியினை தம்மிடம் உள்ள யாராவது ஓர் ஆசிரி யரை வைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம். பின்னர் மாகாணக்கல்வித் திணைக்களத்திற்குத் தொடர்பாடலும் ஊடகக்;கற்கையும் பாடத்தினைக்கற்பிப்பதற்கு இத்துறைப்பட்டம் பெற்ற ஆசிரியர்களைப் பெற்றுத்தருமாறு விண்ணப்பங்களை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு:-
ஊடகக்கற்கை பாடநெறியினையும் பட்டங்களையும் வழங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கையும்; துறையின் பாரிய பங்களிப்பையும் நாம் மறந்து விடலாகாது. அவர்கள், கல்வித்துறை அதிகாரி களுக்கும் மாணவர்களுக்கும் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் பாடநெறி தொடர்பான விழிப்புணர்வை வழங்கி வருகிறார்கள். இப்பட்டம் பெற்றவர்கள் இன்று அரச, தனியார் துறைகளில் நாம் மேலேகுறிப்பிட்ட அதிகாரிகளாக பணிபுரிகிறர்கள் என்பதை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். அத்துடன் அரசினுடைய வர்தகமானி அறிவித்தலினூடாக இவ்வருடம் மார்ச்-27திகதி(27.03.2019) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனியான ஒருதுறையாக தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிடுவது சாலச்சிறந்தது.
மாணவர்களை இன்றே நாம் வழிநடத்துவோம்:-
யாழ்மாவட்டத்தில் ஒப்பீட்டு ரீதியில் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் பாடநெறியினை தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்து வருகின்றது. அது படிப்படியாக இப்போது முன் னேற்றங்கண்டு வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. தென்பகுதியில் வாழும் எமது சகோதரர்கள் புதியபாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது அதனை தேடிச்சென்று கற்றுப்பட்டங்கள் பெற்று பாரிய பணிப்பொறுப்புக்களில் இருப்பதை நாம் தெளிவாக அறிவது எம்மை வளர்த்துக் கொள்வதற்கு பாரிய துனைபுரியும். இப்பாடநெறியைக் கற்றவர்கள் பலர் ஒன்றிணைந்து மேலைத்தேய நாடுகளுடன் சேர்ந்து பட்டக்கல்லூரிகளை இலங்கையில் நிறுவிவருவதையும் நாம் அறிவது நல்லது. இன்னும் யாழ்மாவட்டத்தில் சில வலயங்கள் இப்பாடத்தை கற்பிப்பதற்கு முன்வராமை ஒரு வேதனைகலந்த உண்மையாகும். எனவே நாம் அனைவரும் ஒருநல்ல முயற்சி எடுத்து தொடர்பாடலும் ஊடகக்கற்கைகற்கை நெறியினை மாணவர்கள் கற்பதற்கு துணைநிற்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். நாம் மேலே குறிப்பிடப்பட்ட தேர்ச்சிக ளுடன் ஆளுமை விருத்தி கொண்டவர்களாக மாணவர்கள் வளர்வதற்கும் சகோதரத்துவத்துடன் இனங்களுக்கிடையில், சமயங்களுக்கிடையில் சகவாழ்வுடனும் கூடிய ஒரு சுபீட்சமான வாழ்வை முன்னெடுக்க தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் பாடநெறி நல்ல சந்தர்ப்பத்தை ஒவ்வொருவருக்கும் வழங்குகின்றது. பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவிலிருந்து மாணவர்களுக்கு ஊடகக் கல்வி வழங்கவேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரை செய்ததையும் நாம் மனதில் கொண்டு எமக்குள் உள்ள வரையறைகளை அல்லது தடைகளை கடந்து தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் பாடநெறியினை பரவலாக பாடசாலைகளில் கட்டாயம் அறிமுகம் செய்யவேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அவ்வாறு கற்பிப்பதனால்,கற்றுக்கொள்வதால் நன்மைகள் பலஉண்டு. எனவே இத்துறைசார்பாக இன்று உருவாகியுள்ள பாரிய வேலை வாய்ப்புச்சந்தையில் எம்மவர்கள் தம்மை சந்தைப்படுத்தி வெற்றி பெற்று அப்பணிகளில் மக்களைநோக்கி அவர்கள் பணியாற்ற எமதுமாணவர்களை இன்றே நாம் வழிநடத்துவோம்.
யாழ்ப்பணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரிப்பத்திரிகையில் 04.10.2019, 05.10.2019 ஆகிய தினங்களில் வெளிவந்திருந்தது பார்க்கலாம். கட்டுரை தேவைப்படுபவர்கள் 0773171038 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும். ம.பிரான்சிஸ்க் -ஆசிரியர் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் யா-பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff